மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த சென்னையும் கடந்த வாரம் முழுவதும் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. வெள்ள பாதிப்புகள் ஒருபுறம் மக்களை தொந்தரவு செய்ய, சென்னை திருவொற்றியூரில் உள்ள CPCL -இல் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெள்ள நீரில் கலந்துள்ளது. இதனால் திருவொற்றியூர் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல், கொற்றலை ஆற்றிலும் இந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்து கடலில் கலந்து வருகின்றது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகள் உள்ளது என சூழலியல் தொடர்பான செயல்பாட்டாளார்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை செய்து வருகின்றது. இதில் இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பசுமைத் தீர்ப்பாயம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் கச்சா எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறுவர்களை எண்ணெயை அகற்றும் பணிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுருத்தவேண்டும். எண்ணூர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை விரைவில் அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் கசிவுக்கு யார் காரண்மோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் தெரிவித்துள்ளது. 


கடலில் கச்சா எண்ணெய்க் கழிவு கலப்பதைத் தடுக்க 75 மீட்டர் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றது என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீட்டர் தடுப்புகளும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350 மீட்டர் தடுப்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தென்மண்டல் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாள் அதாவது டிசம்பஎ 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 


கச்சா எண்ணெய் கழிவினை அகற்றும் பணி


எண்ணூர் கிரீக் பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் கழிவை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு கழிவினை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ”கடலில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்ற எண்ணௌயை உறுஞ்சும் நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பணியை விரைவு படுத்துவதால் மேலும் சில எண்ணெய் உறுஞ்சும் இயந்திரங்கள் இந்த பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த அபாயகரமான கழிவுகளை கும்மிடிபூண்டியில் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்படவுள்ளது. இந்தப் பணிக்காக தனி ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை சார்பாக ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. எண்ணெய் கசிந்த பகுதிகளில் ஏற்பட்ட பல்லுயிர் இழப்புகளை விரைந்து கணக்கிடும் பணியும்  தீவிரமாக நடைபெற்று வருகின்றது. துறை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.