மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகளின் மூலம் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கார்டு கட்டாயமா என்று கேள்வி எழுந்துள்ளது.


சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தால் அண்மையில் வரலாறு காணாத கன மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாகப் பெருங்குடியில் 45 செ.மீ. மழை பொழிந்தது. டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்து தீர்த்த மழையால், லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


பேரிடரால் ஏற்பட்ட சீரழிவு


வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தும், தண்ணீர், மின்சாரம் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர். குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. அடித்தும் செல்லப்பட்டன.  வெள்ள நீருடன், கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நாசமான சம்பவமும் நடந்தது. 20-க்கும் மேற்பட்டோர் மிக்ஜாம் புயலால் பலியாகினர்.




இந்த நிலையில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ₹5,00,000 வழங்கப்பட உள்ளது. அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்கு  ரூ.8,000 வழங்கப்பட உள்ளது.


ரேஷன் கடைகளின் மூலம் பெறலாம்


இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து உள்ளது.


இதனால் ரேஷன் அட்டை வைத்திருப்போர் மட்டுமே நிவாரணத் தொகை பெறத் தகுதியானவர்களா என்று கேள்வி எழுந்துள்ளது.




சென்னை மக்கள் யார் யார்?


விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை, சுமார் 5.9 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில், நான்கு மாந­க­ராட்­சி­கள், 12 நக­ராட்­சி­கள், 14 பேரூ­ராட்­சி­கள் உள்ளிட்டவற்றுடன் ஆயிரக்கணக்கான கிரா­மங்களும் இணைக்கப்பட்டுள்­ளன. இத­னால் சென்­னை பெருநகர மாநகராட்சி­யின் மக்­கள் தொகை 1.59 கோடியாக உள்ளது.


இந்த நிலையில் இதில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் வசிப்பவர்களே. இதனால் 1.11 கோடி மக்களுக்கும் மேல் உள்ளவர்கள் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர். இவர்களால் நிவாரணத் தொகையைப் பெற முடியுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.


2015 பெரு வெள்ள நிவாரணத் தொகை


2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத பெரு மழையாலும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதாலும் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் கோடி நிவாரணத் தொகையை அறிவித்தது.   



குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இதில், ரேஷன் அட்டையை அளவுகோலாகக் கொள்ளாமல், பிற ஆவணங்கள் வைத்திருந்தவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் அட்டை, வங்கி பாஸ்புக், கேஸ் ரசீது, வாடகை வீட்டு ஒப்பந்தம் ஆகியவையும் ஆவணங்களாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.


இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது. விவரங்களைச் சரிபார்த்து வங்கிக்கு நேரடியாகத் தொகை செலுத்தப்பட்டது.




வெள்ள நிவாரணத் தொகை கிடையாதா?


இந்த நிலையில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான வெள்ள நிவாரணத் தொகை கிடையாதா என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும்தான் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா என்பது குறித்து ABP Nadu சார்பில் அரசுத் தரப்பிடம் விசாரித்தோம். அவர்கள் கூறும்போது, ’’வெள்ள நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறைச் செயலர் உதயசந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


முதல் கட்டமாக வெள்ளை, பச்சை, பிங்க் வண்ணம் உள்ளிட்ட அனைத்து விதமான ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ரேஷன் அட்டை இல்லாத பிற மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கலாமா என்பது குறித்து தற்போது ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும்’’ என்று தெரிவித்தனர்.