சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரணமாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கான நிவாரணம் நாளை மறுநாள் முதல் வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள வேளச்சேரியில் ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வழங்கி, நிவாரணப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.


மிக்ஜாம் புயல் பாதிப்பு:


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், மறுநாள் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்தது. ஆனால், வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மூலக்கொத்தளம், மணலி, மிண்ட், அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் என பல பகுதிகளில் தண்ணீர் ஒரு வாரத்திற்கு பிறகே வடிந்தது. பல இடங்களில் 5 நாட்களுக்கு பிறகே மின்சார இணைப்பு கிடைத்தது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது  இதையடுத்து, வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


நாளை மறுநாள்  தொடக்கம்:


வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் நாளை மறுநாள் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதியில் நாளை மறுநாள் முதல் நிவாரண பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும்  வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


தனித்தனி இழப்பீடு:


வெள்ள நிவாரணத்திற்கு தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை மறுநாள் முதலமைச்சர் ரொக்கமாக இதை வழங்குவதன் மூலம் விரைவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குடும்பங்களுக்கு 6 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டாலும், மாடு, ஆடு, பயிர்கள் பாதிப்பிற்கு தனித்தனியாக இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் வலை, படகுகள், வல்லங்கள் பாதிப்பிற்கும் தனித்தனியாக இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகையும் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய குழு ஆய்வு:


சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நேரில் வந்து மத்திய குழு ஆய்வு செய்து சென்றது. அந்த குழுவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பைச் சரி செய்ய நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12 ஆயிரத்து 659 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணமாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கினாலும் எதிர்க்கட்சிகள் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.