மாண்டஸ் புயலை எதிர்கொள்ள விழுப்புரம் மாவட்டத்தில் 1091 முகாம்கள்  தயார் நிலையில் உள்ளதாகவும், அரசு அலுவலர்கள் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையானது மாண்டஸ் புயலாக உருவாகியுள்ளதால் தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதுக்காப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 


இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு  மழை வெள்ள பாதிப்புகளில்  இருந்து மக்களை காக்கும் வகையில்  சென்னையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு  குழுவினர் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். விழுப்புரம்  காகுப்பம் ஆயுதப்படை வளாகத்திற்கு 40 பேர் கொண்ட பேரிடர் குழுவினரை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வாகனங்களையும் பார்வையிட்டு அனைத்து உபகரணங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்திப்பில் ஆட்சியர் மோகன் கூறியதாவது:


விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்க்கொள்ளும் வகையில் 1091 தற்காலிக நிவாரண முகாம்கள் மற்றும்  12 இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தாலுக்காவிலும் அரசு ஊழியர்கள விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு மழையின் தன்மைக்கு ஏற்க விடுமுறை அறிவிக்கப்படும் எனவும், புயலால் பாதிக்கப்படுவோர்கள் தொடர்பு கொள்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ள  1077, 04146 223265, 7200151144  ஆகிய  எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும்  மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துக்கொண்டார்.