மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசண்ட் நகர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் உள்ள கடற்கரையில் வழக்கத்துக்கு மாறாக 6 அடி உயரமாக கடல் அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 520 கி.மீ மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல், புயல் கரையை கடக்கையில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரையிலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காற்றின் இயல்பைவிட நான்கு மடங்கு வேகத்தில் வீசும் என்றும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கும் 50 கி.மீ முதல் 90 கி.மீ வரை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தாக்கத்தால் சென்னையில் கடல் அலைகள் சீற்றத்துடன் கொந்தளித்து வருகிறது. கிட்டத்தட்ட அலைகள் 6 அடி உயர்ந்து பார்ப்போரை அச்சமடைக்க செய்கிறது. இதையடுத்து, கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி:
மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், சென்னையில் உள்ள கடலோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை..?
மேற்கு-வடமேற்கு திசையை கடந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே நகரும்.
08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.