தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் காரணமாக சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Continues below advertisement

இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது தீவிரமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த ‘டிட்வா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிட்வா புயலானது டெல்டா மற்றும் வட இலங்கை கடற்கரை பகுதிகளை நெருங்கு பின்னர் அப்படியே தமிழகத்தின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவின்படி, “டித்வா புயல் நவம்பர் 29ம் தேதி அதிகாலை அப்டேட்டின்படி, புயலின் பாதையில் எந்த மாற்றமும் இல்லை. இது கடலோர பைபாஸ் ரைடராக தமிழக கடற்கரைக்கு இணையாக நகரும். டெல்டா பகுதியில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை தொடங்கியுள்ளது. நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி வரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது, மேலும் காலை 8.30 மணிக்குள் 150-175 மி.மீ. தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Continues below advertisement

மழை மெதுவாக கடலூர் அருகே, பின்னர் புதுச்சேரிக்கு நகர்ந்து அடுத்ததாக மாறி, பின்னர் இரவில் சென்னைக்கு மாறும். ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சிறந்த நாளாக இருக்கும். நேற்று காற்று வீசுவதைக் கண்டு, டெல்டா அருகே வானிலை சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் டிட்வா புயலானது நவம்பர் 30 ஆம் தேதி சென்னைக்கு அருகில் வரும்” என தெரிவித்துள்ளார். 

சென்னையில் மழை

இதனிடையே சென்னையில் அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியுள்ளது. வானம் கருமேகங்கள் சூழ இருட்டியுள்ளதால் இது காலை நேரமா, மாலை நேரமா என்ற குழப்பம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. முன்னதாக சென்னைக்கு டிட்வா புயல் காரணமாக நவம்பர் 29ம் தேதி மாலை முதல் படிப்படியாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் மழையின் அளவை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது அதிகனமழை கொட்ட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வேண்டும், பூங்கா, கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. எமர்ஜென்ஸி விளக்குகள், செல்போன்களை சார்ஜ் செய்து வைக்கவும், தாழ்வான இடங்களில் இருக்கும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே செல்லவும் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.