மயிலாடுதுறை: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டித்வா' புயலின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோ.ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சராசரியாக 7.7 செ.மீ மழை பதிவு
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, டித்வா புயலை எதிர்கொள்வது குறித்து மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இன்று (29.11.2025) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாவட்டத்தின் சராசரி மழை அளவு 7.7 செ.மீ பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அக்டோபர், நவம்பர் மாதங்களில் நேற்று (28.11.2025) வரை பதிவான சேத விவரங்கள்:
- குடிசைகள் பகுதியாக/முழுமையாகச் சேதம்: 160
- ஓட்டு வீடுகள் பகுதியாகச் சேதம்: 22
- கால்நடைகள் உயிரிழப்பு: 117
- மனிதக் காயங்கள்: 1
பேரிடர் மீட்புக்கான உபகரணங்கள் தயார்நிலை
புயல் மற்றும் கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க, அனைத்துத் துறைகளின் சார்பில் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
- ஜெ.சி.பி - 133
- ஜெனரேட்டர்கள் - 164
- பவர் சா (Power Saw) - 57
- ஹிட்டாச்சி - 31
- ஆயில் என்ஜின்கள் - 22
- மணல் மூட்டைகள் - 40,351
- மரம் அறுக்கும் கருவிகள் - 84
- சவுக்குக் கம்பங்கள் - 34,110
- பிளீச்சிங் பவுடர் - 5,870 கிலோ
மேலும், மின்சார வாரியத்தின் சார்பில் 10,795 மின்கம்பங்களும், 40 மின்மாற்றிகளும் அவசர காலத் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் புயலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
- மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்கள்: 12
- அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள்: 33
- குறைந்த அளவு பாதிக்கக்கூடிய இடங்கள்: 80
- மிகக் குறைந்த பாதிக்கக்கூடிய இடங்கள்: 76
- மொத்த பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்: 201
இந்த 201 பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மீட்புப் படைகள் முகாமிடுதல் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள்
கடற்கரையோர கிராமங்களைக் கண்காணிக்கும் வகையில், 31 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் (SDRF) சீர்காழியிலும், 31 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) தரங்கம்பாடியிலும் முகாமிட்டுள்ளனர்.
பொதுமக்கள் மழை மற்றும் சேதம் தொடர்பான புகார்களை உடனடியாகத் தெரிவிக்க ஏதுவாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற்கைக்கோள் இணைப்பைக் கொண்ட அவசர காலக் கட்டுப்பாட்டு அறை (Emergency Control Room) (எண்: 1077 மற்றும் 04364-222588) அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
நிவாரண மையங்கள் தயார்
கனமழை அல்லது புயலால் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க பின்வரும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன:
- பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள்: 4
- புயல் பாதுகாப்பு மையங்கள்: 10
- தற்காலிக நிவாரண மையங்கள் (பள்ளிகள்/கல்லூரிகள்): 438
- திருமண மண்டபங்கள்: 146
- சமுதாயக் கூடங்கள்: 68
மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை உயர் அலுவலர்களும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாக வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர் மெய்யநாதன், தரங்கம்பாடி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பேரிடர் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். மேலும், தரங்கம்பாடி அரசு மருத்துவமனையினைப் பார்வையிட்டு, தேவையான மருந்துப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு நிர்வாகம் இந்த புயலை எதிர்கொள்வதற்கு முழுமையான தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்தவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கவும் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.