சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாளருக்கான அனைத்து உரிமைகளையும் பொதுச்செயலாளர் நிர்வகிக்க விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டவுள்ளது. இந்நிலையில் பதவி பறிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென பொதுக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அப்போது மேடையில்பேசிய முனுசாமி உறுப்பினர்களை கட்டுப்படுத்தினார். ஓபிஎஸ் நீக்கம் தொடர்பாக பொதுச்செயலாளர் முடிவெடுப்பார் என கூறினார். பின்னர் இருக்கையில் அமர்ந்த முனுசாமியிடம், இபிஎஸ் சக ஆதரவாளரான சிவி சண்முகம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
ஓபிஎஸ் நீக்கம் தொடர்பாகவே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.உடனடியாக இருவரிடமும் பேசிய ஈபிஎஸ் இருவரையும் சமாதனப்படுத்தினர். ஓபிஎஸை ஒதுக்கிவிட்டு தனி அணியாக செயல்படத்தொடங்கிய இபிஎஸ்ன் ஆதரவாளர்கள் பொதுக்குழு மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.