இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் 1,888 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. காவலில் இருந்த 1,189 பேர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 


இந்தியா முழுவதும் ஆந்திரா, அசாம், பிஹார், சத்தீஸ்கர், ஹரியாணா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லாக்கப் மரணங்கள் அதிகம் நடந்துள்ளன. 


2012 முதல் 16 வரை 157 கைதிகள் மரணம் அடைந்துள்ளனர். 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2020-ல் மட்டும் 43 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 4 பேர். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 15 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன.


கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டில் நான்கு விசாரணைக் கைதிகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன், சென்னை விக்னேஷ், ராமநாதபுரம் மணிகண்டன் மற்றும் திருவண்ணாமலை தங்கமணி என 4 கைதிகள் மரணம் அடைந்துள்ளனர். 


இதில் கிட்டத்தட்ட ஜெய்பீம் கதையை ஒத்ததாக இருக்கிறது திருவண்ணாமலையில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த பழங்குடி தங்கமணியின் கதை.. கதை அல்ல நிஜம். 




நடந்தது என்ன?


திருவண்ணாமலை தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி அருகே தட்டரணை என்ற கிராமம் உள்ளது. அங்கு மலைக்குறவன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 48 வயதான தங்கமணி என்பவர் வசித்து வந்தார். அவர் விஷ சாராயம் காய்ச்சியதாகக் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி காவல் நிலையத்தால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை 27-ம் தேதி மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 


இச்சம்பவம் தொடர்பாக, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கமணி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். விசாரணைக் கைதியாக இருந்த தங்கமணியின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறை கூறும் அனைத்துமே அப்பட்டமான பொய் என்கிறார் உயிரிழந்த தங்கமணியின் மகன் தினகரன். தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அவர், ஏபிபி நாடுவுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:


உண்மையில் என்னதான் நடந்தது? உங்களின் அப்பாவுக்கு வலிப்பு நோய் வந்துள்ளதா?


இல்லை. அவருக்கு எந்த ஒரு நோயுமே இல்லை. ஆரோக்கியமாகத்தான் இருந்தார். போலீஸார் கட்டிவிட்ட கதைதான் வலிப்பு நோய்.


 



தங்கமணி


தங்கமணியைக் கைது செய்த தகவல் உங்களுக்கு எப்போது தெரிவிக்கப்பட்டது?


கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அப்பாவைக் கைது செய்தனர். எனக்கு 8.45 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது நான் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். உறவினர் ஒருவர் போனில் அழைத்து, அப்பாவைக் காவலர்கள் கையோடு கூட்டிச் சென்றதாகத் தெரிவித்தார். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 27ஆம் தேதி இரவு 8.30 மணி வாக்கில் அப்பா இறந்துவிட்டதாக, ஊரில் இருப்பவருக்குத் தகவல் கிடைத்தது. 


இடையில் உங்களின் அப்பாவை நேரில் சென்று பார்க்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?


26ஆம் தேதி மாலையில் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் அண்ணன் நேரில் போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்தார். அப்போது உங்கள் அப்பாவை காரில் அழைத்துச் செல்வதற்கு ரூ.2,000 வேண்டும் என்று அண்ணனிடம் காவலர்கள் கேட்டு வாங்கியுள்ளனர். அதுதான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. அப்போது எந்த உடல்நலக் குறைவும் இல்லாமல், அப்பா நன்றாக இருந்தார். 


உங்கள் அப்பாவுடைய தொழில் என்ன? கடந்த காலங்களில் சாராயம் காய்ச்சி உள்ளாரா?


அப்பா ஒரு விவசாயி. மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்களின் முன்னோர் சாராயம் காய்ச்சி வந்தனர். ஆனால் இப்போது யாரும் அந்தத் தொழிலில் ஈடுபடுவதில்லை. 


அப்பாவை வெளியே விடவேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறியிருந்தீர்களே?


ஆம், 27ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (கலால்) ஆய்வாளர் நிர்மலா மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்தனர். 'தங்கமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பி.எல். போடப்பட்டால் ஒரு வருடம் உள்ளேயே இருக்க வேண்டும். வழக்கு செலவு, வழக்கறிஞர் செலவு என ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். காலமும் போய், பணமும் போய்விடும். 


அதற்கு பதிலாக எங்களுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டால், தங்கமணி உடனே வெளியே வந்துவிடுவார்' என்று கூறினர். 'ஆனால் எங்களிடம் அவ்வளவு பணமில்லை' என்று கூறினோம். 'உங்களுக்கே இவ்வளவா? கேட்டால் தர மாட்டீர்களா?' என்று கோபமாகப் பேசிவிட்டுச் சென்றனர். 


அங்கிருந்து தங்கை கணவரை ஜீப்பில் ஏற்ற முயற்சித்தனர். அவர் ஏறவில்லை. உடனே பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரை அழைத்துச் செல்ல முயன்றனர். விடுவிக்க ரூ.50 ஆயிரம் கேட்டு, இறுதியில் ரூ.25 ஆயிரத்துக்கு விட்டனர். இதற்கு முன்பாக பிரகாஷின் தம்பி பிரதாப் (23) என்பவரை இப்படித்தான் பொய்யான வழக்கு போட்டு பிடித்துச் சென்றனர். அவர் இன்னும் சிறையில்தான் உள்ளார்.




இப்படித்தான் எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்துச் செல்கின்றனர். காவல் அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் கேட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. காவல் அதிகாரிகளுக்கு வழக்குகள் தேவைப்படுகின்றன. மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த எங்களை அடித்தால், கேள்வி கேட்கக்கூட யாருமில்லை. வலி தாங்க முடியாமல், ஊர்க்காரர்களும் ஒத்துக்கொள்கின்றனர். 


எங்களின் அப்பாவின் மரணம் முதல் மரணமல்ல. அவரை அடித்துக் கொன்றதுபோல, இதற்கு முன்னால் 4 பேர் காவல்துறையின் அராஜகத்துக்கு பலியாகி உள்ளனர். 


தங்கமணியின் உடலில் காயங்கள் இருந்தனவா? பார்க்க அனுமதித்தார்களா?


எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் சென்று அப்பாவின் உடலைப் பார்த்தேன். அவரின் உடல் முழுக்கக் காயங்கள் இருந்தன. அடித்து, கிழித்ததில் அவரின் உதடே வீங்கி, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இடது கையிலும் உடல் முழுக்கவும் காயங்கள் இருந்தன. காவல்துறையினர் குத்தியதில் நாக்கில் பல் பட்டு, ரத்தம் வந்திருந்தது. மிகவும் சித்திரவதை செய்து, அடித்தே அப்பாவைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கான புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. இதையெல்லாம் கேட்ட அம்மா பேசமுடியாமல், அழுது அழுது சோர்ந்துவிட்டார். 


விசாரணை நடக்கும்விதம் மீது உங்களுக்கு திருப்தி உள்ளதா? நம்பிக்கை அளிக்கும்விதமாக விசாரணை செல்வதாக நினைக்கிறீர்களா?


நிச்சயம் திருப்தி இல்லை. எங்களின் அனுமதியே இல்லாமல், அப்பாவுக்கு உடல் கூராய்வு செய்தனர். நாங்கள் எங்கே சென்றாலும் காவல்துறையினர் பின்னாலேயே வருகின்றனர். விஷயத்தை முடிக்க பேரம் பேசுகின்றனர். அழித்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.


என்ன மாதிரியான பேரம் பேசினர்?


இரவு 10 மணிக்கு ரூ.3 லட்சத்தில் ஆரம்பித்தனர். அதிகாலையில் இறுதியாக ரூ.7 லட்சம் வரை பேரம் பேசினர். ஆனால், அப்பாவைக் கொன்றவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.


அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


அப்பாவைக் கொன்றவர்கள் மீது வழக்கு போட்டு, சிறையில் அடைத்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும். எங்களுக்கு நடந்த அநீதி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. இந்த சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும். எங்கள் மக்களை எந்த விசாரணையும் இன்றிக் கைது செய்யக்கூடாது. 





எங்கள் ஊரில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 120 பேர் வசித்து வருகின்றனர். இதில் ஒவ்வொருவர் மீதும் 10, 15 பொய் வழக்குகள் புனையப்படுகின்றன. அடித்தே குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.


திமுக ஆட்சிக் காலத்திலும் இந்த சம்பவங்கள் தொடர்கின்றனவா?


ஆட்சிதான் மாறியுள்ளது. அதிகாரிகளின்அராஜகம் எதுவும் மாறவில்லை. மிகவும் சித்திரவதை செய்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். 


இவ்வாறு உயிரிழந்த தங்கமணியின் மகன் தினகரன் தெரிவித்தார்.


தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அது சட்டப்பூர்வமாக நடக்க வேண்டும். காவல்துறையே சட்டத்தையும் அராஜகத்தையும் கையில் எடுக்கக்கூடாது. தங்கமணியின் மரணத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து, குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.