விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதிகள் காவல்நிலையத்திலும், நீதிமன்ற காவலில் இருக்கும்போதும் உயிரிழப்பது என்பது தமிழ்நாட்டில் தொடர் கதையாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் இந்த லாக்கப் மரணங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த திமுக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் நடந்ததற்கு தற்போதைய முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், தவெக ஆட்சியிலும் லாக்கப் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் சபர்வர்மன் என்பவர் சிறைச்சாலையில் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று தூத்துக்குடியில் 26 வயதே ஆன அருணாச்சலம் என்பவர் உயிரிழந்திருக்கிறார்.
இந்நிலையில், விசாரணையின்போது ஒருவர் உயிரிழந்தால் என்ன நடக்கும் ? விசாரணை எப்படி நடைபெறும், சட்ட நடைமுறை என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் :
- லாக்கப் மரணம் என்றால் முதலில் என்ன ?
ஒருவர் போலீஸ் காவலில் இருக்கும்போதோ அல்லது நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும்போதோ உயிரிழந்தால் அது லாக்கப் மரணம் என சொல்லப்படுகிறது. அதாவது, போலீஸ் விசாரணை செய்யும்போது உயிரிழப்பது, காவல்நிலைய லாக்கப் அல்லது அதன் கட்டடத்திற்குள் ஒருவர் உயிர்போவது, சிறைச்சாலையில் இருக்கும்போது மரணம் ஏற்படுவது, காவல்துறையினர் மருத்துவமனை அல்லது வெளியில் அழைத்துச் செல்லும்போது உயிர் பிரிவதையெல்லாம் இந்த லாக்கப் டெத் என்ற சொல்லுக்குள் அடக்க முடியும்.
- லாக்-அப் மரணம் நடைபெற்றால் உடனே என்ன செய்ய வேண்டும் ?
இந்திய சட்டம் மற்றும் தேசிய மனித உரிமைகள் வழிகாட்டுதலின் படி, ஒருவர் காவலில் இருக்கும்போது உயிரிழந்தால், அந்த சம்பவம் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும், தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும், மாவட்ட ஆட்சியர் அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்க வேண்டியது கட்டாயம். அதே நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் கட்டாயம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் NHRC எனப்படும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசு சார்பில் 24 மணி நேரத்திற்குள் தகவல்களும் விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
- விசாரணையை யார் நடத்துவார்கள் ?
- நீதித்துறை நடுவர் விசாரணை – காவல் மரணங்கள் ஏற்பட்டால் அந்த மாஜிஸ்ட்ரேட் எனப்படும் நீதித்துறை நடுவர் தலைமையிலான குழுவினர் சம்பவ நடந்த இடம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து விசாரணையை நடத்துவர்
- மரணத்தில் குற்றச்சாட்டு இருக்கும்பட்சத்தில், அதில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய காவல்நிலைய அதிகாரிகள் அல்லாத காவல்துறையினர் இந்த விசாரணையை மேற்கொள்வர்
- உடற்கூராய்வு எப்படி நடத்தப்பட வேண்டும் ?
தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதலின்படி, லாக்கப் – டெத் மரணமடைந்தவர்களின் உடற்கூராய்வு என்பது அரசு மருத்துவர்களால் மட்டுமே நடத்தப்படவேண்டும். அது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, காயங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையை அரசு மருத்துவர் தயாரித்து அளிக்க வேண்டும்
- குடும்பத்தினரின் உரிமைகள் என்னென்ன ?
மரணமடைந்த குடும்பத்தினர் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டால் உடற்கூராய்வு அறிக்கையை கேட்கலாம். விசாராணையை கோரலாம், நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யலாம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம், சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அமைப்பின் (SIT) விசாரணையை கேட்கலாம் தூத்துக்குடி அருணாச்சலம் காவல் மரணம் - நடந்தது என்ன ? தொடக்கம் முதல் இறுதி வரை..!
- காவல்துறையினர் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் ?
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்டால், விசாரணையின் அடிப்படையில் முதலில் சம்பந்தப்பட்ட காவலர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் குற்றச்சாட்டு உறுதியானால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யலாம். இதற்கு முன்னர் நடைபெற்ற காவல் மரண வழக்குகளில் காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களை தமிழ்நாடே ஏராளமாக பார்த்திருக்கிறது.
சாத்தான்குளம் கஸ்டடி மரணத்தில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் இன்று வரை சிறையில்தான் உள்ளனர்.
