கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே ஏரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மக்களை போலீசார் விரட்டியடித்தனர். விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 200 ஏக்கர் அளவில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் தற்போது 50 ஏக்கர் பரப்பளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரி தண்ணீர் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்வதோடு, மீன் குஞ்சுகளும் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மீன் குத்தகை ஏலம் விடப்படும். தொடர்ந்து, மீன்பிடி திருவிழா நடப்பது வழக்கம்.


 




 


இந்த ஏரியில் சில தினங்களுக்கு முன் மீன் குத்தகை ஏலம் முடிந்த நிலையில், மீன்பிடி திருவிழா நடைபெற இருந்தது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நடத்த தடை உள்ளது. இந்த சூழலில், நேற்று தடையை மீறி கல்பட்டு ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள், கூடை, வலை, துணிகள் மூலம் மீன்பிடி திருவிழாவை நடத்தினர். கல்பட்டு மட்டுமின்றி, சிறுவாக்கூர், தெளி, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்தனர்.  அதில், கெண்டை, ஜிலேபி, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன்களை மக்கள் ஆர்வத்தோடு பிடித்தனர்.




 


இந்நிலையில் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.


 


தகவலறிந்த காணை போலீசார், கல்பட்டு ஏரிக்கு  விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கிராம மக்கள், தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் நாலாபுறமும் ஓடினர்.  மேலும் எந்நேரத்திலும் பொதுமக்கள் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து,  உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவைப் மதிக்காமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏரியில் மீன் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக காணை போலீசார் 300 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.