கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடலூர் மாநகராட்சியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து அறியும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" என்ற பெயரில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடந்த அக்டோபர் 9 தேதி முதல் வருகின்ற 20ம் தேதி வரை அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர்.
மக்களை தேடி மேயர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மேயர் சுந்தரி ராஜாவிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது பொதுமக்கள் கடலூர் நகரில் மழை நீர் தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணி விரைந்து முடித்து தர கோரிக்கை வைத்தனர், மேலும் மாநகராட்சி பகுதியில் கொசுக்கள் நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 வார்டுகள் வீதம் ஏழு நாட்களில் சுமார் 600 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடமிருந்து மனுக்கள் மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் குப்பைகளை எரிப்பதற்கு அனுமதி கிடையாது, இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சாலையில் தண்ணீர் தேங்காத விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின்விளக்கு உடனடியாக அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்களை தேடி மேயர் என்ற புதிய முயற்சிக்கு மாநகராட்சி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேயரைத் தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகின்றனர்.