கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 65க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர்  பதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் உயிரிழப்பு விவகாரத் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முக்கிய நபரான மாதேஷ் உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்த விசாரணையின்போது சமீபத்தில் மாதேஷ் மெத்தனால் எந்தெந்த இடத்தில் வாங்கினார்? என்ற விவரங்களை சேகரித்த போலீசார் மாதேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட பாரல் மெத்தனாலை கைப்பற்றினர். மேலும் மாதேஷ் வாங்கிய மெத்தனாலுக்கும் அவர் விற்பனை செய்தது மற்றும் கைப்பற்றப்பட்ட மெத்தனாலுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால் தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்தினர். இதில் மாதேஷ் கூறிய தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

 

பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் டேங்கருக்குள் மெத்தனாலை சேமித்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதனை அடுத்து இரவோடு இரவாக அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் பூமிக்கு அடியில் இருக்கும் பெட்ரோல் டேங்கினுள் 2000 லிட்டர் மெத்தனால் இருப்பதை உறுதி செய்து அந்த பெட்ரோல் பங்கிற்கு தற்சமயமாக அவர்கள் சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பும் போட்டனர்.

 

மேலும் இந்த பகுதியில் இன்று அந்த மெத்தனாலை எடுக்கவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். பூமிக்கு அடியில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் பண்ருட்டி பகுதியில் வேறு இடங்களில் இவ்வாறு மெத்தனால் பதுக்கப்பட்டுள்ளதா என்று பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.