46 மணி நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தை  சேர்ந்த பத்மநாபன் என்பவர் கடந்த மே மாதம் 17ம் தேதி அன்று கொத்தனார் வேலைக்கு சென்று இருந்தார். வேலை முடித்துவிட்டு மாலை கிழக்குப்பம் ஏரியில் கை, கால்களை கழுவ சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த ஞானகுரு (27), ராஜசேகர் (24) ஆகியோர் பத்மநாபனை பார்த்து அசிங்கமாக திட்டி மிரட்டி உள்ளனர். இதனை அதே ஊரை சேர்ந்த சக்திவேல்(43)என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
  

 

இதனால் ஆத்திரம் அடைந்த ஞானகுரு, ராஜசேகர் இருவரும் சேர்ந்து சக்திவேலை கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். இது சம்பந்தமாக சக்திவேல் மனைவி மலர்கொடி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலூர் போலீஸ் எஸ்.பி ராஜாராம் விசாரணையை முடிக்கி விட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் 24 மணிநேரத்தில் கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

46 மணி நேரத்தில் 21 சாட்சிகளுடன் 90 பக்க குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் காவல்துறையினர்  தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்து வந்தனர். கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து 46 மணி நேரத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது சாதனையாக பாராட்டப்பட்டது. 

 

இந்த வழக்கு விசாரணை கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி  பிரகாஷ் பிரிவு - 235(ii)  Crpc இருவருக்கும் ஆயுள் தண்டணையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

 

இந்த கொலை வழக்கில் வழக்குப்பதிவு செய்த 46 மணி நேரத்தில் குற்றப்பத்திரிக்கை  நீதிமன்றத்தில் தாக்கல் 

செய்யப்பட்டு 7 மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.