கடலூர்: குடும்ப பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பெட்ரோல் ஊற்றி இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சாதியின் பெயரை குறிப்பிட்டு புகார் எடுக்க முடியாது என காவல் நிலையத்தில் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி
திருமணம் ஆகவில்லை எனக் கூறி கணவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது முதல் மனைவியுடன் சென்றுவிட்ட நிலையில், பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், கணவரிடமிருந்து பணம் ஏதும் தராததால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வசந்தாமணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் பரங்கிப்பேட்டை, ஜெயங்கொண்டம் என காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தெரிகிறது. மேலும் இரண்டு முறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் வெறுப்படைந்த பெண் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“நீ செத்தால் சாவு”
மேலும், புகார் அளிக்க சென்ற இடத்தில் சாதியின் பெயரை கேட்டு உனது புகாரை எடுக்க முடியாது என ஆய்வாளர் கூறியதாகவும், வாழ வீடும் இன்றி சாப்பாட்டுக்கும் வழியின்றி அரசின் காலை உணவு திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு வருவதாகவும், கண்ணீர் மல்க தெரிவித்த அவர், நான் தற்கொலை செய்து கொள்வேன் என காவல் நிலையத்தில் கூறிய போது “நீ செத்தால் சாவு” என காவல் நிலையத்தில் தெரிவித்ததாக அழுதபடி கூறினார்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)
