கச்சா எண்ணெய் சந்தை விலை கடும் சரிவு: பெட்ரோல், டீசல் விலையை ரூ.14 குறையுங்கள்- அன்புமணி

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

குறைந்த அடக்க விலை

இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டன. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக  இருந்தது.  அப்போது இந்தியாவில்  ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே  ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.  கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மைதான்.  ஆனால், அதனால்  ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை  கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில்  பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

ஓரளவாவது குறைக்க வேண்டும்

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக  மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola