’நாட்டில்‌ சட்டம்‌ ஒழுங்கு கெடவில்லை. ஆனால்‌, கெடுக்கலாமா என்று சிலர்‌ சதி செய்கிறார்கள்‌. விமர்சனங்களை நான்‌ உள்ளபடியே வரவேற்கிறேன்‌. ஆனால்‌ விஷமத்தனம்‌ கூடாது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


அரியலூரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’மக்கள்‌ தொண்டைத்‌ தவிர மாற்றுச்‌ சிந்தனை இல்லாத மக்கள்‌ நல அரசாக திராவிட முன்னேற்றக்‌ கழக அரசு செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறது. பத்து ஆண்டு காலம்‌ பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம்‌ அல்ல!


அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட எங்களுக்கு முதலில்‌ இருந்தது. ஆனால்‌ அத்தகைய பாதாளத்தில்‌ இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில்‌ மீட்டெடுத்துவிட்டோம்‌ என்பதுதான்‌ உண்மை. போட்டி போட்டுக்கொண்டு தொழில்‌ நிறுவனங்கள்‌ இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது.


* ஏற்றுமதியில்‌ முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம்‌.
* அனைத்துத்‌ துறைகளிலும்‌ முன்னேற்றப்‌ பாதைக்கு நாம்‌ போய்க்கொண்டு இருக்கிறோம்‌.
* வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது.
* வேளாண்‌ பாசனப்‌ பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது.
*  உயர்கல்வியிலும்‌, பள்ளிக்‌ கல்வியிலும்‌ பல்வேறு விருதுகளைப்‌ பெற்று வருகிறோம்‌.
* மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித்‌ தந்ததன்‌ மூலமாக பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித்‌ தந்திருக்கிறோம்‌.


அடுத்த சில ஆண்டுகளில்‌ பின்தங்கிய பகுதி, மாவட்டம்‌ என்று எதுவும்‌ தமிழ்நாட்டில்‌ இருக்கக்‌ கூடாது. அதை நோக்கித்தான்‌ உழைத்து வருகிறோம்‌.


இவை அனைத்தும்‌, ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும்‌ என்பதற்கு எடுத்துக்காட்டாக திராவிட முன்னேற்றக்‌ கழக அரசு நடத்திக்‌ காட்டும்‌ செயல்கள்‌!


ஒரு ஆட்சி எப்படி நடக்கக்‌ கூடாது - ஒரு முதலமைச்சர்‌ எப்படி நடந்துகொள்ளக்‌ கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான்‌ கடந்த கால ஆட்சி!


தனது கையில்‌ அதிகாரம்‌ இருந்தபோது - கைகட்டி வேடிக்கை பார்த்து - தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி - பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள்‌. இன்று இதையெல்லாம்‌ மக்கள்‌ மறந்திருப்பார்கள்‌ என்று நினைத்து புகார்கள்‌ கொடுக்கிறார்கள். பேட்டிகள்‌அளிக்கிறார்கள்‌. அதையெல்லாம்‌ மக்கள்‌ பார்த்து சிரிக்கிறார்கள்‌.


'உங்கள்‌ யோக்கியதைதான்‌ எங்களுக்குத்‌ தெரியுமே' என்று ஏளனமாகச்‌ சிரிக்கிறார்கள்‌.




நாட்டில்‌ சட்டம்‌ ஒழுங்கு கெடவில்லை. ஆனால்‌, கெடுக்கலாமா என்று சிலர்‌ சதி செய்கிறார்கள்‌. ஐயகோ கெடவில்லையே என்று சிலர்‌ வருத்தப்படுகிறார்கள்‌.


ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம்‌.


“புலிக்கு பயந்தவன்‌, என்‌ மேல வந்து படுத்துக்கோ” என்று சொல்வார்களே, அதுபோல சிலர்‌ “ஆபத்து - ஆபத்து” என்று அலறிக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌.


இப்படிச்‌ சொல்லும்‌ சிலருக்கு, இருக்கும்‌ பதவி நிலைக்குமா” என்று பயமாக இருக்கிறது. அதனால்தான்‌ மக்களைப்‌ பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள்‌.


மக்களுக்கு எந்த ஆபத்தும்‌ இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான்‌ இந்த ஆட்சி. உங்கள்‌ ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள்‌.


விமர்சனங்களுக்கு எதிரானவர்கள்‌ அல்ல நாங்கள்‌. விமர்சனங்களை நான்‌ உள்ளபடியே வரவேற்கிறேன்‌. ஆனால்‌ விஷமத்தனம்‌ கூடாது. விமர்சனம்‌ செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும்‌.


தங்கள்‌ கையில்‌ ஆட்சி இருந்தபோது எதையும்‌ செய்யாமல்‌ இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப்‌ போல, உலக மகா உத்தமனைப்‌ போல பேசுபவர்களுக்கு விமர்சனம்‌ செய்வதற்கான யோக்கியதை இல்லை.


தமிழகம்‌ இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும்‌ உயரத்தையும்‌ அடையத்தான்‌ நமது ஆட்சியின்‌ குறிக்கோள்‌. அந்தக்‌ குறிக்கோளோடு நான்‌ பணியாற்றுகிறேன்‌. அந்தக்‌ குறிக்கோளை அடைய என்னை ஒப்படைத்துக்‌ கொண்டு நான்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.