24 கேரட் சுத்தமான தங்க பசையை, உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த கடத்தல் பயணியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்

சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று முன் தினம் நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னை சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணி விசாவில், தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார். 

உள்ளாடையை சோதித்த அதிகாரிகள்

சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர், அதிகாரிகளின் கேள்விகளுக்கு, சரிவர பதிலளிக்கவில்லை. இதை அடுத்து அவருடைய உடைமைகளை சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அந்தப் பயணியை, தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை கலைந்து, முழுமையாக பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைகள், சிறிய சிலிண்டர் வடிவிலான, மூன்று உருளைகளை மறைத்து வைத்திருந்தார். 

Continues below advertisement

அதிகாரிகள் அதை எடுத்து திறந்து பார்த்தனர். அதனுள் 24 கேரட், சுத்தமான தங்க பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் சுமார் முக்கால் கிலோ சுத்தமான, தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம். இதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள், தங்கப் பசையை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் கடத்தல் சம்பவம் 

சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம் மற்றும் பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு குருவிகள் மற்றும் கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தே வருகின்றன.