உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்.14ஆம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு முதல் பிப்.14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.


நேற்று இது குறித்து கோரிக்கை விடுத்திருந்த விலங்குகள் நல வாரியம், “நம் வேத கால பழக்கவழக்கங்கள் மேற்கத்திய பண்பாடுகளால்  அழியும் நிலையில் உள்ளதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலம் பேருவகை அடைய முடியும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.


இந்நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் இந்தக் கோரிக்கை அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரிடையேயும் தொடர்ந்து கண்டனங்களைப் பெற்று வருகிறது.


அதே சமயம் விலங்கு நல ஆர்வலர்கள் உள்ளிட்ட சில தரப்பினரிடம் வரவேற்பையும் பெற்று வருகிறது.


அந்த வரிசையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


”இந்திய விலங்குகள் நல வாரியம் நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. அதேபோல் ஜனவரி 16ஆம் தேதி காளைகள் அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டி இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" எனக் கோரியுள்ளார்.


இந்நிலையில், எம்.பி சு.வெங்கடேசன், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக ஐடி விங் மாநிலச் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா  உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.






இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும்.


மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளது.