முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடி நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுகவை விட காவல் துறையினரை அதிகமாக தாக்கிப் பேசினார்.


அப்போது “தேர்தலில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றது. தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தது கோவை மாவட்ட மக்களை காப்பாற்றுகிற ஒரே கட்சி அதிமுக என்பதை நிருபித்துள்ளது. திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வழக்கம். ஸ்டாலின் ஆட்சியில் 12 வழக்குகள் உடைய கள்ள ஓட்டு போட வந்த ரவுடியை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார். போலீஸ் செய்யாத வேலையை ஜெயக்குமார் செய்தார். ஜெயக்குமாரை முடக்கும் எண்ணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்


இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடி கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், செல்வராஜ், கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.