டாஸ்மாக்- பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்

தமிழகம் முழுவதும் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட பாட்டில் விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூடுதல் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பாக எச்சரிக்கப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் கூடுதல் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

இந்த நிலையில், சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள்  மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார். 

மேலும் கடந்த ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தபபட்ட  பணியாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும், அந்த ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

Continues below advertisement

மதுபானத்திற்கு ரசீது

மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களின் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டார். இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறிக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நேற்று கூட மது வாங்கிய போது ரசீது வழங்கப்படவில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது எனவும், கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

ரூ.10 கூடுதலாக வாங்கினால் வழக்கு பதிவு

மேலும், நுகர்வோர் கூடுதல் தொகையை கொடுக்க கூடாது எனவும் அவர்கள் கொடுப்பதால் தான் கடை பணியாளர்கள் கேட்கின்றனர் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, அரசு சுற்றறிக்கையை பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என நுகர்வோருக்கு உத்தரவிட்டார்.அந்த புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை பணியமர்த்த, உள்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,  மனுதாரர் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.