இருமல் மருந்து: குழந்தைகள் உயிரிழப்பு அதிர்ச்சி! தமிழக அதிகாரிகள் சஸ்பெண்ட், உரிமையாளர் கைது!
"இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்"

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், ஸ்ரீசன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலையில் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் மருந்து தயாரிக்கும் நிறுவனம்
ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு, மத்தியபிரதேச மாநில சுகாதாரத்துறை கடிதம் எழுதி இருந்தது.
இதையடுத்து ஆலையின் செயல்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, 26 பக்கங்களை கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்ரீசன் நிறுவனம் கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதோடு, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு அதிரடி
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில், மருந்து உற்பத்தி செயல்பாட்டில் 350க்கும் மேற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த விதி மீறல்களை முக்கியமானவை மற்றும் பெரியவை என அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். நிறுவனத்தில் அடிப்படை வசதிகள், தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் தயாரிப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சரியான நடைமுறைகள் இல்லை” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அறிக்கையின்படி, ”குறிப்பிட்ட இருமல் மருந்தானது தொழிற்சாலை வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காற்றை கையாள்வதற்கான வசதிகள் இல்லை. மோசமான வெண்டிலேஷன், பாதிக்கப்பட்ட அல்லது துருப்பிடித்த உபகரணங்கள் இருந்துள்ளன. ஆலை அமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவை இயல்பாகவே மாசுபாட்டின் அபாயங்களுக்கு பங்களித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு ?
இந்த நிறுவனம் டைஎதிலீன் கிளைக்கால் ( Diethylene glycol (DEG)) என தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் இந்த மருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த மருந்தில் 48 சதவித்திற்க்கு மேல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மருந்தே கிடையாது இது விஷம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் பெயிண்ட் தயாரிக்கவும், பிரேக் ஆயில் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை, ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, விளக்கம் கோரி நிறுவனத்தின் நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
நிறுவனத்தை மூட நடவடிக்கை
தொடர்ந்து இந்த இருமல் மருந்து பயன்படுத்திய குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 16 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இருமல் மருந்து குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்துவதற்கான ஆணை (03.10.2025) பிறப்பிக்கப்பட்டது. உற்பத்தி உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 12ம் தேதிக்குள் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றால், 13-ஆம் தேதி லைசென்ஸ் கேன்சல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நச்சுப்பொருள் கலந்ததால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் கைது : இருவர் சஸ்பெண்ட்
இந்தநிலையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ரங்கநாதன் (75) இன்று காலை மத்திய பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தமிழக காவல்துறை உதவியுடன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மருந்து கட்டுப்பாட்டு துறை மூத்த மருந்து தர கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது




















