தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 21 ஆயரித்து 575-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,12,556 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 107 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 1.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சராசரியாக 10 லட்சம் மக்கள் தொகையில் 15,167 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 14,070-ஆக உள்ளது.
மாநிலத்தின் மொத்த பாதிப்பில் தற்போது 9.8 சதவீதம் (1,12,556) பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 100 பேர்களில் சராசரியாக ஒருவர் (1.2%) உயிரிழக்கிறார்.
Tamil Nadu COVID Beds Availability Status
இதன் காரணமாக, தமிழகத்தில் தேவையான மருத்துவ உட்கட்டமைப்புகளை மாநில அரசு தயார் செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தமிழக சுகாதாரத்துறை tncovidbeds.tnega.org என்ற இணையதள போர்ட்டலை நிர்வகித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கோவிட் பயன்பாட்டிற்கு உள்ள காலி படுக்கைகளின் விவரங்களை tncovidbeds வலைதளத்தில் அந்தந்த மருத்துவமனைகள் பதிவேற்றம் செய்து வருகின்றன.
எனவே, லேசான கொரோனா பாதிப்புடைய ஒருவர் தனது மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கோவிட் பராமரிப்பு மையங்கள் பற்றியும், தற்சமயம் அங்குள்ள படுக்கைகளின் இருப்பு நிலை குறித்தும் இந்த போர்ட்டலில் தெரிந்து கொள்ளலாம். அதேபோன்று, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கோவிட்- மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை படுக்கைகளை பற்றிய தகவலை உடனடியாக தெரிந்துகொள்ளலாம். எனவே, மக்கள் இந்த போர்ட்டலை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனினும், சிகிச்சை பெறுவோரின் சேர்க்கைகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையின் மாறும் தன்மை காரணமாக படுக்கைகளின் இருப்புநிலை அவ்வப்போதான மாற்றத்திற்குட்பட்டது.
காலிபடுக்கைகளின் சமீபத்திய விவரத்தினை அறிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.மேலும், காலிபடுக்கைகளின் விவரம் பதிவேற்றம் தொடர்பான தேதி மற்றும் நேரம் ஒவ்வொரு மருத்துவமனைகளின் பெயருக்குக் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ உட்கட்டமைப்புகள்:
தமிழ்நாட்டில் மொத்தம் 1050 மருத்துவமனைகள், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. 658 கோவிட் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் சுகாதார மையங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை (ஐசியு) வழங்குவதற்கு தயாராக உள்ளன. 358 கோவிட் பராமரிப்பு மையங்கள் லேசான பாதிப்பு கொண்டவர்களுக்கு தயாராக உள்ளன.
அரசு கோவிட் மருத்துவமைகள் மற்றும் கோவிட் சுகாதார மையங்களில் 14,000-க்கும் அதிகமான சாதாரண படுக்கைகள், 15,000-க்கும் அதிகமான ஆக்ஸிஜன் உதவிகொண்ட படுக்கைகள் , 4500-க்கும் அதிகமான தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், அரசு கோவிட் பராமரிப்பு மையங்களில் 31,000-க்கும் அதிகமான சாதாரண படுக்கைகளும், 300-க்கும் அதிகமான ஆக்ஸிஜன் கொண்ட படுக்கைகளும் உள்ளன.
மேலும், தற்போது வரை தனியார் கோவிட் மருத்துவமைகள் மற்றும் கோவிட் சுகாதார மையங்களில், 9000-க்கும் அதிகமான சாதாரண படுக்கைகள், 11,500-க்கும் அதிகமான ஆக்ஸிஜன் உதவிகொண்ட படுக்கைகள், 2500-க்கும் அதிகமான தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. மேலும், தனியார் கோவிட் பராமரிப்பு மையங்களில் 9,500-க்கும் அதிகமான சாதாராண படுக்கைகளும், 70-க்கும் அதிகமான ஆக்ஸிஜன் கொண்ட படுக்கைகளும் உள்ளன.