தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகுந்த தாக்கத்தை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு, தற்போது எந்த தளர்வுகளுமின்றி நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்காக கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக 35 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு இன்றும் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.


தமிழகத்தில் இன்று ஒருநாளில் 35 ஆயிரத்து 483 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 18 லட்சத்து 42 ஆயிரத்து 344-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. 




சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 5 ஆயிரத்து 169 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர்த்து பிற 36 மாவட்டங்களில் 30 ஆயிரத்து 314 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று தனிமைப்படுத்தப்படுவர்கள் உள்பட மொத்தாக சிகிச்சையில் இருப்பவர்கள் 49 ஆயிரத்து 55 ஆகும்.


தமிழ்நாடு முழுவதும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 10 லட்சத்து 93 ஆயிரத்து 786 நபர்கள் ஆவார்கள், பெண்கள் மட்டும் 7 லட்சத்து 48 ஆயிரத்து 520 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் ஆவார்கள். இன்று மட்டும் கொரோனாவால் ஆண்கள் 19 ஆயிரத்து 725 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 15  ஆயிரத்து 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 25 ஆயிரத்து 196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 15 லட்சத்து 27 ஆயிரத்து 733 நபர்களாக உயர்ந்துள்ளது.




இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 422 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 467 ஆகவும், நேற்று 448 ஆகவும் பதிவாகிய நிலையில் இன்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக 422 ஆக உயிரிழப்பு குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 182 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். 240 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இன்றைய உயிரிழப்பு மூலம், தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசால் 6 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.