விழுப்புரம் : திண்டிவனத்தில் பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஒப்பந்ததாரரிடம் நகை, பணம் பறிப்பு, ரத்தம் கக்கி சாக மிரட்டல், திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி மோசடி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி, சூனியம் இருப்பதாக நம்ப வைத்து, கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த ஆசாமி மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்த அவர், மீதமுள்ள நகையை 15 நாட்களுக்குள் திருப்பிக் கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நகை, பணம் பறிமுதல்:
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான தனசேகர் என்பவர் கட்டுமான ஒப்பந்ததாரராக உள்ளார். இவருக்கும், திண்டிவனம் பெலாக்குப்பம் சாலையில் வசிக்கும் கமால்பாஷா என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தனசேகரின் குடும்பத்தில் நேரம் சரியில்லை என்றும், பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகங்கள் உள்ளன என்றும் கூறி, பூஜை செய்வதாக கமால்பாஷா தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தனசேகரிடம் இருந்து, அவர் உடுத்தும் துணிகள் மற்றும் நான்கு சவரன் நகை, பணம் ஆகியவற்றை கமால்பாஷா வாங்கியுள்ளார்.
மிரட்டல் விடுத்த ஆசாமி:
நகை, பணம் கொடுத்த பிறகும் தனசேகரின் கஷ்டங்கள் தீராததால், அவர் கமால்பாஷாவிடம் நகையைத் திருப்பிக் கேட்டுள்ளார். இதுகுறித்து தனசேகர் ஓராண்டுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் தலையிட்டுப் பேசி இரண்டு சவரன் நகையை மட்டும் கமால்பாஷாவிடம் இருந்து மீட்டு தனசேகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீதமுள்ள நகையைத் திருப்பிக் கேட்டபோது, கமால்பாஷா, "என்னிடம் வைத்துக் கொண்டால், அடுத்த அமாவாசைக்குள் ரத்தம் கக்கிச் சாகும்படி செய்துவிடுவேன்" என்று தனசேகரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
கமால்பாஷாவின் மிரட்டலைத் தொடர்ந்து தனசேகர் மீண்டும் திண்டிவனம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தனசேகர், தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி. ஆகியோருக்குப் புகார் மனு அனுப்பினார்.
உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன், பாதிக்கப்பட்ட தனசேகர் மற்றும் கமால்பாஷா ஆகிய இருவரையும் நேற்று காலை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தனசேகரிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை அடுத்த 15 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவதாக கமால்பாஷா போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கமால்பாஷாவை காவல்துறையினர் விடுவித்தனர். இந்த கமால்பாஷா மீது ஏற்கெனவே ரோஷணை காவல் நிலையத்திலும் பல புகார்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.