தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


"எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றும்"


சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "என்னை பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை அதிமுக நிறைவேற்றும். 


மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை இனிமேல் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யார் மீண்டும் வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்து கொள்வோம். கட்சியை நேசிக்கும் நபர்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நோக்கில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஒற்றைத் தலைமை என்று நினைக்கவில்லை. 


என்னைப் பொறுத்தவரை நான் சாதாரண தொண்டன்தான். திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே லட்சியம். அதிமுக என்பது ஒன்றுதான். அதில், தெளிவான முடிவு வந்துவிட்டது. இனி, எந்த குழப்பமும் இல்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகரிடம் மீண்டும் மனு அளிப்போம்.


"எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்"


தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். கர்நாடகாவில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என அங்குள்ள நிர்வாகிகள் கூறியதால் அங்கு போட்டியிடுகிறோம். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்தது.


திமுகவுக்கு கைப்பாவையாக செயல்படுகிறார் ஓபிஎஸ். அதிமுக தலைமையகம் புனிதமான இடம். யார் தவறாக நடந்தாலும் தண்டிக்கப்படுவர். அதிமுக அலுவலக கலவரம் விவகாரத்தில் ஓபிஎஸ் மூலம் திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. பொதுக்குழு நடந்தபோது அதில் பங்கேற்காமல் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்க்கு என்ன வேலை?" என்றார்.


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் அவர் வசமானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில கட்சியாக உள்ள அதிமுகவிற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதிமுக சார்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அதிமுக சார்பில் கர்நாடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை அதிமுக பொதுச்செயலாளருக்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.