காங்கிரஸ் புறக்கணிப்பு: கடலூரில் உறுதியானதா திமுக-காங்கிரஸ் கூட்டணி விரிசல்? அரசியலில் பரபரப்பு!
மத்திய அரசை கண்டித்து கடலூரில் தொழிற் சங்கங்களின் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சி.

மத்திய அரசை கண்டித்து கடலூரில் தொழிற் சங்கங்களின் ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசை கண்டித்து போராட்டம்
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், விதை மசோதா 2025 திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கலந்து கொள்ளாத காங்கிரஸ்
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தொழிற்சங்கங்களும் கலந்து கொண்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி கலந்து கொள்ளவில்லை.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் இடையே இழுபறி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் என திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் யாரும் கலந்து கொள்ளாமல் ரயில் மறியல் போராட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சுமூகமான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகிறது. இந்த கூட்டணி பிரியவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எண்ணி வரும் நிலையில், அதை உண்மையாக்கும் விதமாக நடந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























