தவெகவுக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சியினரை திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரக்குறைவாக விமர்சித்த நிலையில் இதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இதனிடையே திமுகவின் தோல்வியை தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் உண்டான விரக்தியில் சில திமுகவினர் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணனின் சர்ச்சை பேச்சு

அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜூனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்க வைத்ததாக கொளத்தூர் தொகுதி மக்களை சரமாரியாக வசைபாடினார். இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினரையும் அவர் தரக்குறைவாக விமர்சித்தார். 

Continues below advertisement

இது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி., எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

விரக்தியிலும் அகங்காரத்திலும் பேசலாமா?

அவர் தனது பதிவில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு. “பொ “ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது.

சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது. நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான். எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம்.

திமுக தலைமை இதனை ஊக்குவிக்கிறதா?

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. திமுக தலைமையிடம் ஒரு கேள்வி இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம்.

அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி. அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.