கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாக கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட ஐந்து பேர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 25ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு பெறப்பட்ட 13,957 மனுக்களில் 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2,530 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 487 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் 11ஆம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அலமேலு என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே வார்டில் கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைவரும் திரும்ப பெற்றனர். இதை தொடர்ந்து அலமேலு போட்டியின்றி தேர்வானதாக அறிவித்து அதற்கான சான்றிதழை அவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். இருப்பினும், அதிமுக வேட்பாளர் சலேத் மேரி தனது வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை எனக்கூறிய அதிமுகவினர் சிலர், தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், திடீரென காவல் துறையினரின் கட்டுப்பாட்டை மீறி சாமிதுரையை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜை தொடர்புகொண்டு கேட்டபோது , தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையிடம் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு எப்படி நிராகரிக்கப்பட்டது என்று கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் கேள்வி எழுப்பி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தன்னை ராஜசேகரன், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பணி செய்ய விடாமல் தடுத்ததாக சாமிதுரை புகார் அளித்துள்ளார். அதன் மீது விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
சாமிதைுரையை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக ஒரு காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் தன்னை இழிவுபடுத்தும் வகையில் திட்டியதாகவே சாமிதுரை புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அத்துமீறி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் நுழைந்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராஜசேகர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்," என்று காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி ஒன்றிய தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, அதிமுக சார்பில் சலேத் மேரி, கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11ஆம் வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சலேத் மேரியை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்மொழிந்த வேலு என்ற நபர் தனது ஆதரவு கடித்தை திரும்பப்பெற்றதால் அதிமுக வேட்பாளர் சலேத் மேரியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.