தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மணல் கொள்ளையைத் தட்டிகேட்ட விவசாயியை, ஜே.சி.பி. இயந்திரத்தால் தாக்கி, மணல் தோண்டிய குழிக்குள்ளேயே தள்ளிப் புதைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தொடர் மணல் கொள்ளை குறித்து புகார்

திருவிடைமருதூர் அருகே கிளைக்காட்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (43). விவசாயியான இவர், தன் கிராமத்தை ஒட்டியுள்ள முடிகொண்டான் ஆற்றுப் படுகைப் பகுதியில் சட்டவிரோதமாகத் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவதாகக் குற்றம் சாட்டி வந்தார்.

Continues below advertisement

இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையம், கனிமவளத் துறை, வருவாய்த் துறை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை பலமுறை முறைப்படி புகார் அளித்துள்ளார். இருப்பினும், அதிகாரிகள் தரப்பில் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

20 அடி ஆழத்திற்கு மணல் தோண்டல்

இதனிடையே, விவசாயி சங்கரின் வயலுக்கு அருகிலேயே, நாச்சியார்கோவிலைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான செந்தில் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விதிமுறைகளை மீறி, சுமார் 20 அடிக்கும் அதிகமான ஆழத்திற்குத் தொடர்ச்சியாக மணல் தோண்டி எடுத்துச் செல்லப்பட்டு வந்துள்ளது. தன் விவசாய நிலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், இதனைச் சங்கர் பலமுறை தட்டிக்கேட்டு எச்சரித்துள்ளார்.

ஜே.சி.பி.யால் தாக்கினர்... புதைக்க முயற்சி செய்ததால் அதிர்ச்சி

இந்நிலையில் நேற்று சங்கர் வழக்கம் போல் தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, ஏற்கனவே 20 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்ட அதே இடத்தில், மேலும் கூடுதலாக 10 அடி ஆழத்திற்கு ஜே.சி.பி. இயந்திரத்தைப் பயன்படுத்தி டிராக்டர்களில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதைச் சங்கர் பார்த்துள்ளார். உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று மணல் அள்ளும் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜே.சி.பி. மற்றும் டிராக்டர் ஓட்டுநர்கள், செந்தில் மற்றும் அவரது மகன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் சங்கருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்கும்பல் சங்கரை ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டே கொடூரமாகத் தாக்கியுள்ளது. மேலும் தோண்டப்பட்டிருந்த சுமார் 30 அடி ஆழ மணல் குழிக்குள் அவரைத் தள்ளி உயிருடன் புதைக்கவும் முயன்றுள்ளனர்.

ஆபத்தான சூழலில் அலறிய விவசாயி... அக்கம்பக்கத்தினர் உதவி

ஆபத்தான சூழலில் சங்கர் அலறிய சத்தம் கேட்டு, அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் திரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்டதும் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிராக்டருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி 

படுகாயமடைந்த சங்கரை மீட்ட கிராம மக்கள், அவரை உடனடியாக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சங்கர் அளித்த புகாரின் பேரில், தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில் உட்பட நான்கு பேர் மீது நாச்சியார்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட விவசாயி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது