தஞ்சாவூர் நகராட்சி மன்றம் கி.பி.1866 மே 9 ஆம் தேதி முதல் நகராட்சியாக ஆங்கிலேயர் உருவாக்கினர். தொடர்ந்து கி.பி.1983 ஆம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்தின்,  தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியாகும். மாநிலத்தின் 12-வது மாநகராட்சியாக கடந்த 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியின் அப்போதைய ஆண்டு வரி வருவாய்  54 கோடியாகும். தஞ்சாவூர் மாநகராட்சி  நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை  கடும் நிதி சுமையில் சிக்கியது. அலுவலர்களுக்கு சம்பளம் போட முடியாத  நிலை, மின் கட்டணம் செலுத்த முடியவில்லை  போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட  செய்து  கொள்ள  முடியவில்லை. இதனால் தஞ்சாவூர் மாநகராட்சி வருமானமில்லாமல் தவித்து வந்தது. இதனை தொடர்ந்து புதிய ஆணையராக சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார்.




அதன் பிறகு மாநகராட்சியின் நிலையை அறிந்து, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மாநகராட்சியில், வரி வசூல் பெரிய அளவில் பின் தங்கியிருந்தது. மாநகராட்சிக்கு சொந்தமான  இடங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து வாடகையினை உயர்த்தி உள்வாடகைக்கு விட்டதன் மூலம்  தனி நபர்கள் ஆதாயம் அடைந்தார்களே தவிர  மாநகராட்சியின்  வருமானம் பெருகவில்லை.  சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற்றை உயர்த்த முடியாத நிலை. இது போன்ற பல காரணங்களால் மாநகராட்சிக்கு போதுமான வருமானம் இல்லை. வருவாயை விட செலவு அதிகரித்திருந்ததால் நிதி சுமையில் சிக்கியது. ஊழியர்களுக்கு  மாத சம்பளம் போட முடியவில்லை. ஓய்வூதியர்களுக்கு அதன் பலன்களை கொடுக்க முடியவில்லை. மின் கட்டணம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி  செய்ய முடியாத சூழலில் சிக்கியுள்ளதை ஆணையர் கவனத்தில் வைத்து கொண்டு, வருமானத்தை பெருக்குவதற்கான திட்டங்களுக்கு தயாரானார்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட93 கடைகளுக்கு ஒப்பன் டெண்டர் விட்டார். அப்போது ஆளுங்கட்சியின், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கவலைப்படாமல், கடைகளை ஏலம் விட்டார். இதனை பல ஆண்டுகளாக நகரின் மையப்பகுதியில் 99 வருட லீஸ் அடிப்படையில் மாநகராட்சி இடங்களை மாதம் 499க்கு வாடகைக்கு எடுத்து  யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜீபிடர் தியேட்டர் போன்றவை நடத்தப்பட்டு வந்தது லீஸ் காலம் முடிந்தும் அதனை ஒப்படைக்கவில்லை சீல் வைத்து  நடவடிக்கை எடுத்து  கோடிக்கணக்கில் மதிப்புடைய அந்த இடங்களை மீட்டு, மாநகராட்சி வசம் கொண்டு வந்தார்.


கடைகளை உள் வாடகைக்கு விடப்பட்டவர்கள், கடையின் நிலுவைத்தொகையினை வழங்கி விட்டு, ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதால், ஏலம் எடுத்தவர்கள், பாக்கி உள்ளவர்கள் என அனைவரும் பணத்தை செலுத்தினர். இதனால் 93 கடைகளில் ஒவ்வொரு கடைக்கும் அட்வான்ஸாக 5 லட்சம், வைப்பு தொகை 12 மாத வாடகை என வசூல் செய்தார். ஒரு கடையின் வாடகை 25,000  மேல் ஏலத்தில் சென்றது  குறிப்பிடதக்கது. இதன் மூலம் மொத்தம் சுமார் 10 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. முன்பு 85 கடைகள் மூலம் 54 லட்சம் வருமானம் கிடைத்து வந்த நிலையில் தற்போது புதிய கடைகள் புதிய வாடகைக்கு விட்டதன் மூலம் ஆண்டுக்கு 4.75 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் வருமானம் பெருகியது. இதில் முதற்கட்டமாக அலுவலர்களுக்கு  சம்பளம் வழங்கினார். மின் கட்டணம் செலுத்தப்பட்டது.குறிப்பிட்ட அளவிற்கு ஓய்வூதியர்களுக்கான பண பலன்கள் கொடுக்கப் பட்டுள்ளது. 




புதிய பேருந்து நிலையத்தில் மொத்தம் 122 கடைகள் உள்ளன. அதனை சொற்ப வாடகைக்கு எடுத்து பலர் உள் வாடகைக்கு விட்டிருந்தனர். அதனை கண்டறிந்ததுடன் அதற்கும் புதிதாக டெண்டர் நடத்தினார். அதன் மூலம்  முந்தைய ஆண்டில் 94.21 லட்சம் வருமானம் கிடைத்து வந்த நிலையில் தற்போது 206 லட்சம்  என கூடுதலாக 112 லட்சம் வருமானம் கிடைத்தது. இதே போல் கீழவாசலில் கட்டப்பட்ட புதிய கடைகளை வாடகைக்கு விட்டதன் மூலம் வருமானத்தை பெருக்கினார். மாநகராட்சி இடங்களில் வணிகம் செய்து கொண்டு வாடகை, வரி உள்ளிட்டவை செலுத்தாமல் இருந்தவர்களை  கண்டறிந்து அவற்றை வசூல் செய்ததன்  மூலம்  கோடிக்கணக்கில் வருமானம் வந்தது.


இதே போல் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சுதர்சன சபா என்ற இடத்தில் முக்கிய புள்ளி ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்  கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்ததுடன் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பையும்  ஏற்படுத்தி வந்தார் அதனை சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மதுபானக் கடை மற்றும் பார் நடத்தி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதி வந்தனர். அதற்கும் சீல் வைத்திருப்பதுடன் இடத்தை மீட்பதற்கான முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிட்டதட்ட 350 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனி நபர்களின் ஆதிக்கத்திலிருந்து  மீட்டிருக்கிறார். இதன் மூலம்  கோடி கணக்கில் மாநகராட்சி வருமானம் பெருகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தற்போது இன்னும் கோடிகணக்கிலான பல முக்கிய அத்தியாவசியை தேவைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. செலவு போக மீதி பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ஆக்கிரமிப்பில் இருந்த  இடங்களை மீட்டார். எதிர்ப்புகளை சாதுர்யமாக சமாளித்தல் போன்றவற்றால் ஆணையரின் இந்த முயற்சி சாத்தியமாகியிருக்கிறது. நான்கு மாதத்தில் 350 கோடி மதிப்பிலான இடங்களை மீட்டிருக்கிறார். 20 கோடி வரை வருமானம் கிடைக்க செய்துள்ளார். நிதி சுமையில் சிக்கி தவித்த  மாநகராட்சியை அதிலிருந்து மீட்டிருப்பதன் மூலம் தமிழகத்திற்கே வழிகாட்டியிருக்கிறார். இந்த நடை முறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் உள்ள அனைத்து  நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் பணியில் இருப்பார்கள். ஆனால் தஞ்சாவூர் ஆணையர் சரவணகுமாரின் அதிரடி நடவடிக்கைக்கு அனைத்து அலுவலர்களும் கட்சி பாகுபாடு பார்க்காமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம் என்றனர்.