இந்தியாவின் குக்கிராமம் முதல் நகர்ப்புறங்கள் வரை சாதிவெறி இருப்பது போல, பல நாடுகளில் மதவெறி தலைவிரித்தாடுவதைப் போல இதைவிட மோசமான ஒரு வெறி நிறவெறி ஆகும். ஐரோப்பிய நாட்டவர்கள் ஆப்பிரிக்க நாட்டவர்களை நிறவெறியால் அடிமைப்படுத்தியதும், ஒடுக்கியதையும் உலக வரலாறு சொல்கிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் திரையுலகிலும் இதன் தாக்கம் இன்றளவும் இருக்கிறது. ஆஸ்கர் பெற்ற கருப்பு நிற ஹாலிவுட் திரையுலகினர் எண்ணிக்கையே அதற்கு சாட்சி ஆகும்.

Continues below advertisement

நிறவெறி:

இந்தியாவிலும் நிறவெறி என்பது இல்லாமல் இல்லை. சாதிவெறி, மதவெறி போன்று பெரியளவில் பேசப்படாமல் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த நிற பாகுபாடு காரணமாக இந்தியாவில் பலரது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

இதற்கான சாட்சிதான் சமீபத்தில் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ வர்ணனையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் வெளியிட்ட கருத்து ஆகும். 

Continues below advertisement

கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு ஆகியவற்றிற்காக நான் பயன்படுத்தப்படாமலே இருந்தேன். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில்கூட, புதியதாக வந்தவர்கள் கூட பிட்ச் அறிக்கை, டாஸ் மற்றும் தொகுப்பு பணிகளைச் செய்தார்கள். இதற்கு என்ன காரணம்? என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு உங்கள் நிறமா? என்று பதில் கேள்வியை ரசிகர்கள் எழுப்ப நிற பாகுபாடே காரணம் என்று பதிவிட்டிருந்தார். 

தமிழ்நாட்டிலும் நிற பாகுபாடு:

சிவராமகிருஷ்ணன் கூறியது 100 சதவீத உண்மையாகும். இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போட்டிகளில் தொகுப்பாளர், வர்ணனையாளர் ( ஆண்கள், பெண்கள்) பெரும்பாலும் கருப்பு நிறத்தினராக இருக்கமாட்டார்கள். கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பவர்கள் இதன் நிதர்சன உண்மையை உணர்ந்திருப்பார்கள். கிரிக்கெட் மட்டுமின்றி ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது நிறம் மிக கடுமையான தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. 

நமது இந்தியாவிலே வெள்ளை நிறத்தவர்களுக்கு கிடைக்கும் மதிப்பு, கருப்பு நிறத்தில் இருப்பவர்களுக்கு சமமாக கிடைப்பதில்லை என்பது வேதனையான உண்மை. தமிழர்கள் காலங்காலமாகவே கருப்பாகவே இருந்தனர் என்பதற்கான அடையாளங்கள் ஆயிரம் இருந்தாலும் தமிழ்நாட்டிலே கருப்பாக இருப்பவர்களை சற்று ஏளனமாக பார்க்கும் குணம் பலருக்குள்ளும் இருக்கிறது.

மறுக்கப்படும் வாய்ப்புகள்:

திருமணம் போன்ற வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆணோ, பெண்ணோ அவர்கள் கருப்பாக இருந்தால் அவர்கள் எதிர்பாலின வரனில் முதல் தேர்வாக இருப்பது மிக குறைவே ஆகும். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இதனால் மிக கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதனால், பல பெண்களின் திருமண வாழ்க்கை நினைத்தபடி நடக்காமல் போனதும் உண்டு. திருமணம் தள்ளிப்போனதும் உண்டு.

உதாரணமாக சினிமா, தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடிப்புத் திறமை என்பதைக் காட்டிலும் நிறமே பிரதான அடிப்படையாக மாறுகிறது. இதன் காரணமாகவே தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் கருப்பாக இருக்கும் பெண்கள் மிக குறைவான அளவிலே இருக்கின்றனர். இது மட்டுமின்றி பல்வேறு வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்கள், பெரும்பாலான கடைகளில் (நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்பட) கருப்பாக இருப்பவர்கள் வரவேற்பு இடங்களில் இருப்பது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.

சினிமாவும் ஒரு காரணம்:

அதேபோல, பெரிய நிறுவனங்களில் சில உயர்பொறுப்புகளிலும் நிறத்தின் காரணமாக பலர் புறக்கணிக்கப்படுவதாக ஒரு வித குற்றச்சாட்டுகளும் ஆங்காங்கே உள்ளது. இந்த நிற பாகுபாட்டை ஊக்குவித்ததால் திரையுலகத்தின் பங்கு மிகப்பெரியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ் சினிமாவின் இடைப்பட்ட காலங்களில் வந்த படங்களில் ஏராளமான உருவகேலி, கருப்பு நிறத்தை கேலி செய்யும் நகைச்சுவை காட்சிகள் உள்ளது. இதுபோன்ற காட்சிகள் மக்கள் மனதில் கருப்பு என்றாலே அழகல்ல என்ற எண்ணத்தை வலுக்கட்டாயப்படுத்தி திணிப்பதற்கே பயன்பட்டது.

மேலும், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய சந்தையில் கருப்பாக இருப்பவர்கள் வெள்ளையாக மாற்றும் அழகுசாதன பொருட்கள் என்று 90-களுக்கு பிறகு வந்த விளம்பரங்கள் ஒளிபரப்பாகியதும் ஒருவித காரணம். அதன் எதிரொலி இந்தியாவில் இன்று வரையிலும் சரியாமல் விற்பனையாகும் அழகுசாதன பொருட்களே சாட்சியாகும். 

குரூரமான மனநிலை:

ஒருவரின் நிறத்தை வைத்து அவரின் திறமையையும், குணத்தையும் தீர்மானிப்பது மிக மிக மோசமான மனநிலை ஆகும். இது சாதிவெறி மற்றும் மதவெறிக்கு நிகரமான குரூரமான மனப்பாங்கு ஆகும். இனி வரும் காலங்களில் சிறு வயதில் இருந்த நிறபாகுபாட்டுடன் ஒருவரை நடத்துவது மிகவும் தவறு என்பதை குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்களும், இளைஞர்களும் நிறம் காரணமாக ஒருவரை இழிவாக பேசுவதையும், தரம் தாழ்த்தி நடத்துவதையும், அவர்களின் வாய்ப்பை புறக்கணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.