திருவண்ணாமலை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2024-2025 கல்வி ஆண்டிற்கான கட்டணமில்லா சீருடை தைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்  தலைமையில் இன்று காந்தி நகரில் உள்ள ஸ்ரீ நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியில் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 1215 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் தையல் தொழிற்  கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2024 - 2025 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி சீருடைகள் தைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  மகளிருக்கான ஆலோசனைக் கூட்டத்தில்


 





மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:



திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் 2 ஆயிரத்து 174 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் 73 ஆயிரத்து 514 மாணவர்கள் மற்றும் 73 ஆயிரத்து 899 மாணவிகள் என மொத்தம் 1லட்சத்து 47 ஆயிரத்து 413 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு அரசு சார்பில் 4 செட் கட்டணமில்லா சீருடைகள் தைத்து வழங்கப்படுகிறது. அதாவது 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர்,மேல் சட்டையும் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை, சட்டையும் வழங்கப்படுகின்றன. 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு முழுக்கால் சட்டையும் (பேண்ட்) மாணவிகளுக்கு சுடிதார், மேல்கோட்டும்
வழங்கப்பட்டு வருகின்றன. சீருடைகளில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை பதிவு செய்து நிவர்த்தி செய்ய வேண்டும். சீருடைகளை தரமாக தைக்காத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.




தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளுடன் சீருடைகள் தைக்க வேண்டும், குறிப்பாக தேவைப்படும் இடங்களில் இரண்டு தையல்கள் போட வேண்டும் கேன்வாஸ் காலர் வைத்து தைக்க வேண்டும், நைலான் பட்டன்கள் பயன்படுத்த வேண்டும். சரியான அளவில் அழகாகவும் தரமாகவும் சீருடைகளை தைத்து வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் பயன் அடைவது மட்டுமல்லாமல் மகளிர் தையல் கூட்டுறவு சங்க பெண்களுக்கும் நல்ல வருவாயுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஏற்றார்போல் அழகாகவும் தரமாகவும் விரைந்து தைத்து தர மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ மூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யா, மாவட்ட தொழிற் கூட்டுறவு அலுவலர் எம்.ஜெகதீசன், தொழிற்கூட்டுறவு மேற்பர்வையாளர் ராஜபிரகாஷ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.