கோவையில், சமீபத்தில் பூப்பெய்திய 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை, தனியார் பள்ளி ஒன்று, முழு ஆண்டுத் தேர்வை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து கேட்டதற்கு அலட்சியமாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளியின் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனியார் பள்ளியில் மாதவிலக்கால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்பெய்தியுள்ளார். தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், 7-ம் தேதி அந்த மாணவி தேர்வெழுத வந்துள்ளார். ஆனால், மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி, அந்த மாணவியை வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளது அந்த தனியார் பள்ளி நிர்வாகம்.

மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமையை கேள்விப்பட்ட அவரது தாய், நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் அது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அந்த பள்ளி நிர்வாகமோ, எங்கள் பள்ளியில் இப்படித்தான் நடக்கும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் மாணவியை சேர்த்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளது.

பள்ளியின் மீது புகார் அளித்த மாணவியின் பெற்றோர்

இதைத் தொடர்ந்து, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, அந்த தனியார் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளியின் முதல்வர் ஆனந்தி மற்றும் பள்ளி கண்காணிப்பாளரிடம் சிவகாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தவறு உறுதியானால் நடவடிக்கை - அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்

இதனிடையே, இச்சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பள்ளியில் போலீசார் விசாரித்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பள்ளி மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையின் முடிவில் தவறு உறுதியானால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி வெளியே அமர்ந்து தேர்வெழுதிய வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இதை பார்த்த பொதுமக்கள், தற்போதுள்ள நவீன காலத்திலும், இப்படிப்பட்ட அவல நிலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.