கோவை, திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புறக்கணித்தனர். கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் மட்டும் பங்கேற்றார்.


இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது, விழா மேடையில் அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். கீழே விருந்தினர்கள் வரிசையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அமர்ந்திருந்தார். அவரை விழா மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிக் கொண்டிருந்தபோது, கீழே வரிசையில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் வந்து அமருமாறு அழைத்தார்.






வானதி சீனிவாசனும் அவரது அழைப்பை ஏற்று விழாமேடைக்கு வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். முதல்வரின் வானதியை மேடைக்கு அழைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


“ கோவை விமான நிலையத்தில் இருந்து இங்கு  வர இரண்டரை மணி நேரமாகி விட்டது. மிகுந்த ஆர்வத்துடன் ஏராளமானோர் வரவேற்றதால் குறித்த நேரத்திற்கு மேடைக்கு வர தாமதம் ஏற்பட்டது.  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து புதிய திட்டங்களை துவக்கிவைக்க வந்திருக்கின்றேன். 22-ஆம் தேதி இந்த நிகழ்விற்கு வர வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மதிப்பீட்டில் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது.



அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெறவில்லை. வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்குதான் நடத்தப்படுகின்றது. அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என இந்த அரசு செயல்படுகின்றது. தி.மு.க. அரசை பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


தேர்தலுக்கு முன்பு  அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டது. ஆட்சி அமைந்த அன்றே இதற்கு தனித்துறை அமைக்கப்பட்டது.  இப்போதும் பலர் மனுக்களை கொடுத்து வருகின்றனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும். புதிய திட்டங்களை விட, தனி மனிதனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது தான் முக்கியம்." இவ்வாறு அவர் பேசினார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண