கோயம்புத்தூரில் உள்ள மிக முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்(Gandhipuram Bus Stand) விரைவில் புதிதாக கட்டப்படவுள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. 

Continues below advertisement

கோவையில் பேருந்து நிலையங்கள்

தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரமான கோயம்புத்தூரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் பேருந்து நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கோவையைப் பொறுத்தவரை காந்திபுரத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் பிரதானமான இடமாக திகழ்ந்துள்ளது. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், தர்மபுரி, ஓசூர் மற்றும் கரூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

இதனைத் தவிர நகர பேருந்துகள் செல்ல தனியிடம், எஸ்இடிசி பேருந்து முனையம், தென்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. 

Continues below advertisement

காந்திபுரம் பேருந்து நிலையம்

இதில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட காந்திபுரம் பேருந்து நிலையம் கடந்த 1971ம் ஆண்டு கட்டப்பட்டது. கிட்டதட்ட 55 ஆண்டுகளை கடந்து விட்ட இப்பேருந்து நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. நாள்தோறும் 800க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் நிலையில் சுமார் 1 லட்சம் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

இதனால் பயணிகள் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை கட்ட மாநகராட்சி நிர்வாகம்  முடிவு செய்தது. இந்த பேருந்து நிலையத்தைக் கட்ட ஐஐடி நிபுணர்களின் உதவியை நாடியது. தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையை கோவை மாநகராட்சி நிர்வாகம் கேட்டது. இதனடிப்படையில் ரூ.35 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டவுள்ளது. அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு அடித்தளத்தில் 2014 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த, 4 பிளாட்ஃபார்ம்களில் 70 பேருந்துகளை நிறுத்தும் வசதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 45 கடைகள், டிக்கெட் கவுண்டர்கள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் ஏசி வசதியுடன் கூடிய 5 காத்திருப்பு அறைகள், 6 கழிப்பறைகள், லாக்கர் ரூம், பாலூட்டும் அறை, மழைநீர் சேமிப்பு அமைப்பு, 6 இடங்களில் படிக்கட்டு, லிஃப்ட் வசதி போன்றவையும் செய்யப்படவுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், சத்தியமங்கலம், அவிநாசி, மேட்டுப்பாளையம் மற்றும் ஆனைக்கட்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் காந்திபுரம் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டால் மத்திய சிறைச்சாலை அருகே தற்காலிகமாக பஸ் ஸ்டாண்டை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அனுமதிக்காக கோவை மாநகராட்சி ஒருபுறம் காத்திருந்தாலும், மறுபுறம் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.