புதுச்சேரி: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆரோவில் அறக்கட்டளையில், இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) அதிகாரிகளுக்கும், அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் இடையே சமூக மற்றும் இளைஞர் நலன் சார்ந்த முக்கியத் திட்டங்களைப் பற்றிய ஆழமான கலந்தாலோசனை சமீபத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், தேசிய முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

Continues below advertisement

அதிகாரிகள் பங்கேற்பு

இச்சந்திப்பில், ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு அலுவலர் டாக்டர் ஜி. சீதாராமன், மூத்த ஆலோசகர் டாக்டர் வேணுகோபால், மற்றும் ஆலோசகர் கோஷி வர்கீஸ் ஆகியோர் ஆரோவில் தரப்பில் பங்கேற்றனர். இந்தியக் கடலோரக் காவல்படை சார்பாக, புதுச்சேரி மற்றும் மத்திய தமிழக மாவட்ட கமாண்டர் DIG எஸ். எஸ். தசிலா, மற்றும் மாவட்ட லாஜிஸ்டிக்ஸ் அதிகாரி அசிஸ்டன்ட் கமாண்டன் சுனதி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய விவாதங்கள் மற்றும் முடிவுகள்

1. மீனவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பு: "கடலில் எங்கள் கண்கள்"

Continues below advertisement

DIG தசிலா அவர்கள், மீனவர்களைக் “கடலில் எங்கள் கண்கள் மற்றும் காதுகள்” எனப் பாராட்டினார். மீனவர்களின் உயிர் மற்றும் நலனைப் பாதுகாப்பது கடலோரக் காவல்படையின் தலையாயப் பொறுப்பு என்பதை வலியுறுத்தி, மீனவர்களுக்கான தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

2. இளைஞர்களைப் படைத்துறைக்கு ஊக்குவித்தல் 

ஆரோவில் அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்கள் மூலம், இளைஞர்களைப் படை மற்றும் ஒழுங்கமைப்புச் சேவைகளில் இணைவதற்கான ஊக்குவிப்பு முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது இளைஞர்களிடையே நாட்டுப் பற்று, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பாங்கை உருவாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

3. ஸ்ரீ அரவிந்தோ-ஆரோவில் அமைப்புகளின் இணைப்பு

இரு அமைப்புகளும் “தேசியம் முதலில்” என்ற ஒரே தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதால், புதிய நிர்வாகக் குழுவில் இரு அமைப்புகளுக்கும் இடையே உள்ள இணைப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இரு அமைப்புகளையும் உருவாக்க Mother அவர்களே நோக்கம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

4. கடற்கரை சுத்தம் மற்றும் பசுமைப் பாதுகாப்பு 

புதுச்சேரி கடற்கரை, பல்கலைக்கழகம் அருகிலுள்ள பகுதிகள், மற்றும் ஆரோவில் பீச் பகுதிகளில் நடக்கும் கடற்கரை சுத்தம் மற்றும் விழிப்புணர்வு இயக்கங்கள் பற்றிய பேச்சின்போது, இது மக்கள் மத்தியில் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்க்க உதவுவதாகக் கூறப்பட்டது. இந்த முயற்சிகளில் பள்ளி/கல்லூரி மாணவர்கள், இளைஞர் குழுக்கள், தன்னார்வலர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதும் பாராட்டப்பட்டது.

5. ஆரோவில்லின் கலாசார மற்றும் கல்வித் தாக்கம்

ஆரோவில்லின் தனித்துவமான கலாசார மற்றும் கல்வி மதிப்புகள், இன்றைய இளைஞர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளச் செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

6. ராஷ்ட்ரிய ரக்ஷா யூனிவர்சிட்டியுடன் (RRU) இணைப்பு

DIG தசிலா அவர்கள், இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் RRU இணைந்து நடத்திய பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுத் தொகுப்புகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஒருங்கணைந்த பார்வையின் பலன்

சந்திப்பின் முடிவில் கருத்து தெரிவித்த DIG தசிலா அவர்கள், “ஆரோவில் Mother மற்றும் ஸ்ரீ அரவிந்தோ அவர்களின் தத்துவத்தால் முன்னேறி வருகிறது. இங்குள்ள இளைஞர்களின் மனதில் உருவாகும் இந்த நேர்மறை மாற்றம், இந்தியாவின் எதிர்காலத்தை இன்னும் பிரகாசமாக மாற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.