முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் | Chief Minister's Comprehensive Health Insurance Scheme


தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.


இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ.5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதி



• இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். (அரசாணை(நிலை) எண்.560 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை (அஉதி1-1) நாள்:16.12.2021)


• கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்


குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்


2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்


3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்


மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.


உதவி மையம் :



இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.