TVK Cabinet Ministers: வரலாற்றில் முதல் முறை.. தமிழக அரசில் 7 பட்டியலின அமைச்சர்கள்.. சாதனை செய்த விஜய்!
Tamil Nadu Cabinet Ministers: கடந்த 2021-2026 திமுக ஆட்சியில் முதலில் கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், சி. வி. கணேசன் ஆகியோர் முதலில் அமைச்சரவையில் இடம்பெற்றனர். கடைசி ஒன்றரை ஆண்டுகளில் கோவி. செழியனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் 7 பட்டியலின எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது. முதற்கட்டமாக மே 10ம் தேதி முதலமைச்சராக விஜயும், அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதன்படி 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இன்றைய தினம் 21 தவெக அமைச்சர்கள், 2 காங்கிரஸ் அமைச்சர்கள் என 23 பேர் பதவியேற்றனர். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் விஜயுடன் சேர்த்து 33 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதிகரித்த பட்டியலின அமைச்சர்கள்
இதனிடையே தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்டியலின பிரிவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகனும், அவிநாசி தொகுதியில் கமலியும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மதன் ராஜாவும் அமைச்சராகியுள்ளனர். அதேபோல் அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜ், ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ் செல்வன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., தென்னரசு மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஸ்வநாதன் ஆகிய 7 பட்டியலின அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 6 பேர் தமிழக வெற்றிக் கழகம், ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு புரட்சி செய்துள்ளதாக தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றால் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இருந்த எண்ணிக்கை என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அதில் 46 தனித்தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. இதில் பட்டியலின சமூகத்தினருக்கு 44 தொகுதிகளும், பழங்குடியின பிரிவினருக்கு 2 தொகுதிகளும் அடங்கும். இதுவரை திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் குறைந்தப்பட்சம் 2 அல்லது 3 பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படும்.
அதேசமயம் கடந்த 2021-2026 திமுக ஆட்சியில் முதலில் கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், சி. வி. கணேசன் ஆகியோர் முதலில் அமைச்சரவையில் இடம்பெற்றனர். கடைசி ஒன்றரை ஆண்டுகளில் கோவி. செழியனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன்மூலம் முதல்முறையாக ஒரு அரசில் பட்டியலின அமைச்சர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருந்தது. இந்த முறை அதன் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சமூகத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















