மக்கள் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவால் இந்த ஆட்சி நடந்து வருகிறது என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதும் எதிர்க் கட்சித் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் விதமாகவும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''டாஸ்மாக் போலவே பிற துறைகளிலும் கட்சி நிதி பெறப்பட்டு வருகிறது. இப்போதும் சொல்கிறேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டோம். தொடவும் விடமாட்டோம். தொட்டால் விடமாட்டோம். இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்.
ஒவ்வொருவரும் நடுங்கிப் போய் இருக்கிறார்கள்
ஒவ்வொரு ஊழலாக இனி வெளிவரும் போல. ஒவ்வொரு வேடமும் இனி கலைந்துவிடும் போல. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நடுங்கிப் போய் நம் மீது அவதூறு பரப்புகிறார்கள்.
அவர்கள் தயவால்தான் நம் ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். மக்கள் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவால் இந்த ஆட்சி நடந்து வருகிறது. நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்கிறீர்கள். ஆனால், அவர்களை அமைச்சர் ஆக்கினால் ஏன் கதறுகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு கதறல்?
5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் ஆட்டம்
எல்லாக் கட்சிகளும் நமக்கு ஆதரவு கொடுத்தது, சுயேச்சையாக எடுத்த முடிவு என்கிறார்கள், இதில் எங்கிருந்து வந்தது ’’நாங்கள்தான் அனுப்பி வைத்தோம்’’ என்ற வார்த்தை?
பேசு, பேசு என்கிறார்கள். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் இந்த ஆட்டம் ஆடிவிட்டது’’.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
