முதலமைச்சர் விஜய் இன்று கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அவரது பேச்சை அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் முன்பு நேரலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. இந்த சூழலில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கடும் நடவடிக்கை:
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.
தலைமையாசிரியர் சஸ்பெண்ட்:
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.
கல்விக்காகவே, அரசியலுக்க அல்ல:
மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.
ஒழுங்கு நடவடிக்கை:
எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு நேரலை செய்யப்பட்டதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
