CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Kalaignar Karunanidhi Birth Anniversary: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து. தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், மாநில உரிமைகளில் பங்களிப்பை நினைவு கூர்கிறேன்- விஜய்.

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் மாநிலம் முழுவதும் உற்சாகமாக இந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் இந்நாள் முதல்வர் விஜய், கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இப்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக என்னும் கட்சியைத் தொடங்கிய நாளில் இருந்தே, அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை அரசியல் எதிரியாகப் பிரகடனப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுகவைச் சரமாரியாக விமர்சித்து வந்தார். அக்கட்சியின் தலைவரும் அப்போதைய முதல்வருமான ஸ்டாலினை, ’’சி.எம். அங்கிள்’’, ’’ஸ்டாலின் அங்கிள்’’ என்று விமர்சனம் செய்து வந்தார்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 3, 2026
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை…
முதலமைச்சரான பிறகு முதன்முதலாக ஜூன் 1ஆம் தேதி அன்று நடந்த, பொது நிகழ்விலும் (திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா) இனி போட்டி என்பது திமுக - தவெக இடையில்தான் என்று விஜய் கூறி இருந்தார்.
இந்த நிலையில் திமுக முன்னாள் தலைவருக்கு, முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.
தவெக சொல்வது என்ன?
எனினும் இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறும்போது, ’’தவெக தலைவராக விஜய், கருணாநிதிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. மாநிலத்தின் முதலமைச்சராக, முன்னாள் முதல் அமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்’’ என்று கூறி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















