CM Stalin: மக்களுடன் முதல்வன் திட்டத்தின் சேவைகள், முன்னதாக நகர்ப்புறங்களில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்களுடன் முதல்வர் திட்டம்:


ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே, பொதுமக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த திட்டம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


தருமபுரியில் முதலமைச்சர் ஸ்டாலின்:


அரசின் அறிவிப்பின்படி,  இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.  அப்போது,  ஊரக பகுதிகளுக்கான ‛மக்களுடன் முதல்வர்' என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார். அதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கின.






பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:


விழாவில் , சேலம் மாவட்டத்திற்கான 20 அரசு பேருந்துகளின் சேவை உள்ளிட்ட, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு, சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனிவிமானத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டத்தில் விழா நடைபெறும் பகுதியை அடைந்தார். முதலமைச்சரின் வருகையையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் நோக்கம் என்ன?


”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் நோக்கம் என்பது அரசு துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்று சேர வேண்டும் என்பது தான். இந்த திட்டத்தின் மூலம் அரசு துறை சேவைகள் பெற மக்கள் மனு அளிக்கும்போது அதன் மீது உடனடியாக தீர்வு காணப்படும். கடந்த அண்டு தொடங்கப்பட்ட இந்த இந்த திட்டத்தின் மூலம், தற்போது வரை மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான் இந்த திட்டம் ஊரகப்பகுதிகளுக்கும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.