பாஜகவில் உள்ள வாரிசுகளின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் உடனே பதவி விலகிவிடுவார்களா என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கூட்டம்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது “தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது என்னுடைய தனிப்பட்ட ஆட்சி மட்டுமல்ல, நூற்றண்டுகளாக ஒரு இனம் தாங்கி நிற்கும் கொள்கைகளை மக்களின் ஆதரவோடு செயல்படுத்துகிற திராவிட மாடல் ஆட்சி தான் இது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் நோக்கத்தை செயல்படுத்துவதற்கான ஆட்சி தான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை இந்தியா முழுவதும் எடுத்துச் சொல்ல தான் தற்போது இந்தியா எனும் கூட்டணி உருவாகியுள்ளது.
”மிரளும் பாஜக”
இந்தியா என்ற பெயரை கேட்டாலே சிலர் மிரளுகிறார்கள், அலறுகிறார்கள். பாட்னா மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதை பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்திய பிரதேசம், அந்தமான் என எங்கு சென்றாலும் பிரதமர் திமுகவை விமர்சிக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறதாம், கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருவதால், நேற்று அமித் ஷா வந்ததை போன்று ஒன்றிய அமைச்சர்கள் இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவார்கள்.
”பாவ யாத்திரை”
தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க அமித் ஷா வந்தாரா, இல்லை ஏற்கனவே அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைக்க வந்தாரா? ஏதோ பாதயத்திரையை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ளார். அது பாதயாத்திரை இல்லை. குஜராத்தில் 2002ம் ஆண்டும், தற்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை. இரண்டு மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு சென்று அமித் ஷாவால் அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தில் தான் அவர் தமிழ்நாடு வந்து இருக்கிறார்.
”புளித்து போன விமர்சனம்”
aமித் ஷா பேசி இருக்கிறார், திமுக குடும்ப ஆட்சி என. கேட்டு கேட்டு புளித்து போன ஒரு விஷயம் அது. வேற எதையாவது மாற்றி சொல்லுங்கள் என நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். பாஜகவில் எந்த வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளையே பதவி விலகிவிடுவார்களா. பாஜகவில் மாநில வாரியாக பதவியில் இருக்கும் வாரிசுகளை பெயர்களை நான் சொல்ல தொடங்கினால் முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். அதனால் வேறு எதையாவது புதியதாக சொல்லுங்கள் அமித் ஷா.
பட்டியலிட்டு கேள்வி:
பதவியேற்பின் போது தமிழின தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஜபக்ஷேவை பங்கேற்க செய்த, மோடிக்கு இலங்கை பிரச்னை குறித்து பேச தகுதி உண்டா? திடீரென அமித் ஷாவிற்கு மீனவர்கள் மீது பாசம் பொங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட உயிரிழக்க மாட்டார்கள் என வாக்குறுதி அளித்தீர்களே செய்தீர்களா. 1200 தமிழக மீனவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்டதாக பிரதமர் மோடி அண்மையில் பேசியதன் மூலம், அவரது ஆட்சிக் காலத்தில் 1200 மீனவர்கள் கைது செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி விவகாரம்:
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பும் அமித் ஷா, குற்றவழக்கில் தொடர்புடையவர்கள் எல்லாம் பிரதமரின் ஒன்றிய அமைச்சரவையிலும் இடம்பெற்று இருப்பது குறித்து மோடியிடம் கேள்வி எழுப்புவாரா? இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து விரிவாக பேசமுடியாது. பாஜக தனது அரசியல் எதிரிகளை சலவை செய்யும் இயந்திரமாக தான் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது என்பது இந்தியா முழுக்க தெரிந்த ரகசியம். புலனாய்வு அமைப்புகளை கொண்டு தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவது, தங்கள் பக்கம் இழுப்பது மற்றும் அவர்களை பரிசுத்தமானவர்களாக பேசுவது தான் பாஜகவின் அசிங்கமான அரசியல். ஒன்றிய பாஜக அரசின் ஆட்டமெல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு தான். பாஜகவின் ஆட்சி முடியப்போகிறது. இந்தியாவிற்கு விடிவுகாலம் கிடைக்க போகிறது. இந்தியாவை காப்பாற்ற இந்தியாவிற்கு வாக்களியுங்கள் என்பதே தேர்தல் முழுக்கம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.