CM Stalin: பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியை நோக்கி வடசென்னை - ஸ்டாலின்
வடசென்னையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வளர்ச்சி திட்ட பணிகளையும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்கின்றனர். சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடக்கும் சில சம்பவங்களை பெரிதுபடுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வருகின்றன.
சீமானை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்
ஒவ்வொரு விவகாரத்திலும் அரசுக்கு எதிராக தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும். பெரியார்-தான் எங்களின் தலைவர், தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் அவர்தான். மற்றவர்கள் பேசுவதை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை” என தெரிவித்தார். கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான், சீமானை விமர்சிப்பவர்களுக்கு மரியாதை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.