காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசு, புலனாய்வு அமைப்புகளை பழிவாங்கம் கருவிகளாக பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் நம்பகத்தன்மையை கெடுத்து வருவதாக சாடியுள்ளார்.
முதலமைச்சரின் பதிவு என்ன.?
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய பாஜக அரசு மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லாமல், அரசியல் போட்டியாளர்களைத் துன்புறுத்தவும், அவதூறு பரப்பவும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உண்மை அவர்களின் பக்கம் இருக்கும்போது, எந்த பயமும் இல்லாமல், CPP தலைவர் சோனியா காந்தி மற்றும் மாண்புமிகு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், என் சகோதரர் ராகுல்காந்தி ஆகியோர் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளில் உறுதியாக நிலைநிறுத்திய காந்தி குடும்பத்தை துன்புறுத்த பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, மீண்டும் மீண்டும், இந்த பழிவாங்கும் அணுகுமுறை, முதன்மையான புலனாய்வு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் கெடுத்து, அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாகக் குறைத்து வருகிறது என்றும் பாஜக அரசை விளாசியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு - நீதிமன்றம் கூறியது என்ன.?
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்தது. சட்டவிரோத பணிப் பரிவர்த்தனை வழக்கு, எந்த விசாரணை அமைப்பின் அடிப்படையிலும் நடத்தப்படாமல், தனி நபர் அளித்த புகார் அடிப்படையிலானது எனக் கூறி கோர்ட்டு நிராகரித்தது.
காவல்துறை போன்ற அமைப்பின் நடைமுறைப்படி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்கு மேல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் என முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்திலேயே வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், “இந்த வழக்கில், சமீபத்தில்தான், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையையே பதிவு செய்திருக்கிறது.“ என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
“ஆனால், அமலாக்கத் துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது, நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை அபகரிக்க முயன்றதாக சுப்பிரமணிய சுவாமி மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து அபகரிக்க முயன்றதாக சோனியா, ராகுல் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனுவின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்துள்ளது என குறிப்பிட்ட நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை நிராகரித்து உத்தரவிட்டது.