CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் இதுவரை பயனடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல்களை, முதலமைச்சரே அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
முதலமைச்சரி வெளியிட்டுள்ள பதிவு
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள்
இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,
மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம்! என குறிப்பிட்டுள்ளார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம்
தமிழ்நாடு அரசு, சாதாரண மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள மற்றொரு மருத்துவ சேவை திட்டம் தான் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம். இத்திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்தும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், மொத்தமாக 1,256 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, இலவசமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதம்
அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து, அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பொதுவாக தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய 1000 முதல் 15,000 ரூபாய் வரை செலவாகும். அதுவே, அரசு மருத்துவமனைக்கு சென்றால், 4,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில், அனைத்து பரிசோதனைகளும் கட்டணமில்லாமல் செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட கட்டணமில்லாமலேயே வழங்கப்படுகின்றன.
இதனால், இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம், ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.





















