ஆளுநர் ரவியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தனர். நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சுமார் 45 நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
20 மசோதாக்கள் அனுப்பி வைப்பு:
ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசி அவர், "உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலிப்படி ஆளுநர் ரவியின் அழைப்பை ஏற்று, அவரை சந்தித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது.
தமிழக அரசால் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர். 10 மசோக்களையும் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். மொத்தம் 20 மசோதாக்களை ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது" என்றார்.
"சந்திப்பு சுமூகமாக இருந்தது”
தொடர்ந்து பேசிய அவர், "ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் 7 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ளது. முன்விடுதலை தொடர்பாக அரசு பரிந்துரைத்த 49 கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தோம்” என்றார் அமைச்சர் ரகுபதி.
பின்னணி என்ன?
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ”சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் விளைவாக தான் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.