நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், வரும் 9-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீட் விவகாரம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை
நீட் விவகாரம் குறித்து நடைபெற உள்ள சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்து, சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவத் துறையில், நம் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மாநிலத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழகத்தின் அனைத்து தரப்பும் கூறி வருவதாகவும், நீட் தேர்வு வந்த பிறகு, ஏழை எளியவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார். கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லக்கூடிய வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இந்த தேர்வு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
நீட் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் உயர்நிலைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு, நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகும் ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மீண்டும் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பு வைக்கப்பட்டதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், மத்திய அரசின் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கோரிய விளக்கங்களுக்கு உடனடியாக பதில் அனுப்பப்பட்டும், அவற்றையெல்லாம் ஏற்காமல், மத்திய அரசு நமது நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ள செய்தியை வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்துக் கொண்டார்.
வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்
மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம், ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை எனவும், போராட்டத்தில் அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
மேலும், இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம், வரும் 9-ம் தேதி மாலை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவித்த அவர், அதில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில், மருத்துவக் கனவோடு கல்வி பயிலும் லட்சக்கணக்கா மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க, தமிழ்நாடு அரசு அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.