மிக்ஜாம் புயலின் காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் கடந்த வாரம் முழுவதும் ஸ்தம்பித்தது. குறிப்பாக வெள்ள நீரினால் ஒட்டுமொத்தம் சென்னையும் குப்பைகளால் நிரம்பிக் காணப்பட்டது. இதனால் மற்ற மாவட்டங்களில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் தலைநகர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி துப்புரவு பணியில் ஈடுபட்ட மொத்தம் 3449 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூபாய் நான்கு ஆயிரம் வழங்கினார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ” கண்ணுக்கு ஒரு இடர் என்றால் நொடிப்பொழுதில் காக்க வரும் கை போல, தலைநகர் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் மிக்ஜாம் புயல் பாதிப்பைப் போக்கக் களம் கண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு 4000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன். பயன்தூக்கார் செய்த உதவிக்கு அன்பைவிட நன்றியேது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் ஸ்தம்பித்து போனது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டனர்.
சென்னையை ஒட்டுமொத்தமாக வெள்ளம் புரட்டி போட்டதில் அரசும், மக்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதில் உயிர்ச் சேதம் என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டது. ஆனால் பொருட்சேதம் என்பதை தவிர்க்க முடியவில்லை.
குறிப்பாக, மிக்ஜாம் புயலால் கனமழை கொட்டியதில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. மேலும், பாசனக் கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கின. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயர்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது, மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து. ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம்:
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை, ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக என்றிருந்ததை, ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்:
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.